இறையனார் களவியல் என்னும் நூலுக்கு
நக்கீரர் எழுதிய உரையில் உள்ளபடி
தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று சங்கம் இரீஇயினார் பாண்டியர்.
அவருள் தலைச்சங்கம் இருந்தார்
- அகத்தியனாரும்,
- திரிபுர மெரித்த விரிசடைக் கடவுளும்,
- குன்றெறிந்த முருகவேளும்,
- முரிஞ்சியூர் முடிநாகராயரும்,
- நிதியின் கிழவனும்
அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினார் என்ப.
அவர்களாற் பாடப்பட்டன எத்துணையோ
- பரிபாடலும்,
- முதுநாரையும்,
- முதுகுருகும்,
- களரியாவிரையும்
அவர் நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றி யாண்டு சங்கம் இருந்தார் என்பது.
அவர்களைச் சங்கம் இரீஇயினார் காய்சினவழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாக எண்பத்தொன்பதின்மர் என்ப.
அவருள் கவியரங்கேறினார் எழுவர் பாண்டியர் என்ப.
அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரை என்ப.
அவர்க்கு நூல் அகத்தியம் என்ப.
இனி, இடைச்சங்கம் இருந்தார்
- அகத்தியனாரும்
- தொல்காப்பியனாரும்,
- இருந்தையூர்க் கருங்கோழி மோசியும்,
- வெள்ளூர்க் காப்பியனும்,
- சிறுபாண்டரங்கனும்,
- திரையன் மாறனும்,
- துவரைக் கோமானும்,
- கீரந்தையும்
அவருள்ளிட்டு மூவாயிரத்து எழுநூற்றுவர் பாடினார் என்ப.
அவர்களாற் பாடப்பட்டன
- கலியும்,
- குருகும்,
- வெண்டாளியும்,
- வியாழமாலை அகவலும்
அவர்க்கு நூல்
- அகத்தியமும்,
- தொல்காப்பியமும்,
- மாபுராணமும்,
- இசைநுணுக்கமும்,
- பூதபுராணமும் - என இவை.
அவரைச் சங்கம் இரீஇயினார்வெண்தேர்ச் செழியன் முதலாக
முடத்திருமாறன் ஈறாக
ஐம்பத்தொன்பதின்மர் என்ப.
அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கபாடபுரத்து என்ப.
இனிக் கடைச்சங்கம் இருந்து தமிழாராய்ந்தார்
- சிறுமேதாவியாரும்,
- சேந்தம்பூதனாரும்,
- அறிவுடையரனாரும்,
- பெருங் குன்றூர் கிழாரும்,
- இளந்திருமாறனும்,
- மதுரை ஆசிரியர் நல்லந்துவனாரும்,
- மதுரை மருதனிளநாகனாரும்,
- கணக்காயனார் மகனார் நக்கீரனாரும்
அவருள்ளிட்டு நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினார் என்ப.
அவர்களாற் பாடப்பட்டன
- நெடுந்தொகை நானூறும்,
- குறுந்தொகை நானூறும்,
- நற்றிணை நானூறும்,
- புற நானூறும்,
- ஐங்குறு நூறும்,
- பதிற்றுப்பத்தும்,
- நூற்றைம்பது கலியும்,
- எழுபது பரிபாடலும்,
- கூத்தும்,
- வரியும்,
- சிற்றிசையும்,
- பேரிசையும்,
அவர்க்கு நூல் அகத்தியமும், தொல்காப்பியமும் என்ப.
அவர் சங்கமிருந்து தமிழ் ஆராய்ந்தது ஆயிரத்து எண்ணூற்று ஐம்பதிற்றி யாண்டு என்ப.
அவர்களைச் சங்க மிரீஇயினார் கடல்கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி ஈறாக நாற்பத்தொன்பதின்மர் என்ப.
அவருட் கவியரங் கேறினார் மூவர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது உத்தரமதுரை என்ப.
No comments:
Post a Comment