Pages

Monday 26 December 2016

நற்றிணை 315 Natrinai 315

ஊழின் வலிமை மிகுதியால் 
பல ஆண்டுகள் வாழ்கிறேன் 
என்று சினம் கொண்டு 
கடல் அலை வீசிக்கொண்டிருக்கிறது. 

அந்த அலைகளைப் புடைத்துக்கொண்டு 
பல ஆண்டுகள் 
வினையாற்றிய அம்பி 
வாய் முரிந்து கடல் துறையின் ஓர நிலத்தில் நிற்கிறது.  

நல்ல எருது 
ஏரில் நடந்து 
நிலம் வளம் பெற்றிருக்கிறது என்று, 
உழவர் எருதுகளைப் 
புல் மண்டிக்கிடக்கும் காட்டில் மேய விடுவர்.

உழவர் எருதுகளை மேய விட்டிருப்பது போல் 
அம்பிக்கு மணக்கும் புகை ஊட்டிப் பூசை செய்யாமல், 

ஞாழல் மரத்திலும் 
புன்னை மரத்திலும் கட்டி, 
பரதவர் நிறுத்தி வைத்திருக்கின்றனர்.

இப்படி 
அம்பியைக் கட்டிவைத்திருக்கும் 
கடல்துறை நாட்டின் தலைவனே!

நீ நல்லபடியாக, 
சிறப்பினைக் கொண்டதாக, 
இவளிடம் கொண்டிருக்கும் உறவு 
மெலிந்து தவறுதலும் நேரும். 

இதனை நீ நன்றாகத் தெரிந்துகொள்ளாவிட்டால், 
தெரிந்து என் தலைவியைத் திருமணம் செய்துகொள்ளாவிட்டால், 
நான் வருந்துவது போல, 
உன்னை நயந்த என் தலைவி 
தோள் மெலிந்து, 
கண்ணில் கண்ணீர் மல்கி, 
மலர் தீயில் தீய்ந்துபோவது போலக் 
கருகிப்போவாள்.

தோழி தலைவனிடம் 
இவ்வாறு கூறுகிறாள்.

கேண்மை = நட்புறவு
தெய்வம் = ஊழ்
நன்றும் = பெரிதும்
நொவ்விதின் = மெல்லிதாக
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை நெய்தல்

ஈண்டு பெருந் தெய்வத்து யாண்டு பல கழிந்தென,
பார்த் துறைப் புணரி அலைத்தலின், புடை கொண்டு,
மூத்து, வினை போகிய முரி வாய் அம்பி,
நல் எருது நடை வளம் வைத்தென, உழவர்
புல்லுடைக் காவில் தொழில் விட்டாங்கு,     5
நறு விரை நன் புகை கொடாஅர், சிறு வீ
ஞாழலொடு கெழீஇய புன்னை அம் கொழு நிழல்
முழவு முதற் பிணிக்கும் துறைவ! நன்றும்
விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின்
தவறும்; நன்கு அறியாய் ஆயின், எம் போல்,     10
ஞெகிழ் தோள், கலுழ்ந்த கண்ணர்,
மலர் தீய்ந்து அனையர், நின் நயந்தோரே.

தலைமகனைப் பரத்தை நொந்து சொல்லியது.
அம்மூவனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.


அம்பி 

No comments:

Post a Comment