Pages

Sunday, 25 December 2016

நற்றிணை 311 Natrinai 311

நம் பழம்பெரும் ஊரானது, 
மழை பொழியின், 
பார்வைப் பெண்மான் போல 
விரும்பும்படி 
நெல்லங்கதிர் விளையும் புதுவருவாய் கொண்டது. 

மழை இல்லாமல் வறண்டுபோனால், 
முண்டகப் பூக்கள் கொட்டும் 
சேறு காய்ந்து 
கடற்கழி நிலத்தில் 
உப்பு விளையும் வருவாய் கொண்டது. 

எப்படியும் அழியா வளம் கொண்டது நம் ஊர். 
இது மிகவும் நன்று. 

கொழுத்த மீன்களைச் சுடும் தெருவும், 
சிறிய பூக்கள் மலரும் ஞாழல் மரமும் 
கொண்ட இந்த ஊரின் துறையும் மிக இனியது.

ஆனால், 
தோழி, 
நம் துறைக்குக் குறை ஒன்று உண்டு. 

புன்னையின் கரிய கிளையில் 
மலர்த்தாதுகளில் படிந்து 
அதன் தேனை உண்ண வரும் வண்டு போல் 
அவர் வரும் தேரின் ஒலி மட்டும் கேட்பதில்லை.

தோழி 
இவ்வாறு சொல்லி, 
தலைவின் ஏக்கத்தில் 
தானும் பங்குகொண்டவள் போல 
அவளை ஆற்றுவிக்கும் பொருட்டுப் 
பேசுகிறாள்

பழி – குறை
பிரசம் = தேன்
விடுமான் உளை – பார்வைமான் – ஆண்மானை மயக்கிப் பிடிக்க வளர்க்கப்படும் பெண்மான்
வெறுப்ப = சலிக்கச் சலிக்க விரும்புமாறு
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை நெய்தல்

பெயினே, விடு மான் உளையின் வெறுப்பத் தோன்றி,
இருங் கதிர் நெல்லின் யாணரஃதே:
வறப்பின், மா நீர் முண்டகம் தாஅய்ச் சேறு புலர்ந்து,
இருங் கழிச் செறுவின் வெள் உப்பு விளையும்,
அழியா மரபின் நம் மூதூர் நன்றே                          5
கொழு மீன் சுடு புகை மறுகினுள் மயங்கி,
சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே;
ஒன்றே  தோழி! நம் கானலது பழியே:
கருங் கோட்டுப் புன்னை மலர்த் தாது அருந்தி,
இருங் களிப் பிரசம் ஊத, அவர் 10
நெடுந் தேர் இன் ஒலி கேட்டலோ அரிதே.

அலர் கூறப்பட்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது.
உலோச்சனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.


ஞாழல்

No comments:

Post a Comment