Pages

Friday, 23 December 2016

நற்றிணை 309 Natrinai 309

என் தோள் நெகிழ்ந்து கிடப்பதையும், 
வரிந்த உடல்கட்டு வாடிக் கிடப்பதையும், 
தளிர் வனப்பு (இயல்பழகு) இழந்திருக்கும் என் மேனியையும் 
பார்த்து 
“இவள் படும் இந்தத் துயரம் நான் செய்தது அன்றோ” 
என்று எண்ணித் தோழி, நீ அழாதே.

வாழைமரத்தின் இலையில் 
மழைத்துளி விழும் 
பெருமலை நாட்டினை உடையவன் அவன். 

அவன் நட்பு 
எத்தகைய விழுமம் தரும் என்று அறிந்தவர் யாரும் இல்லை 
என்று நீதானே முன்பெல்லாம் கூறுவாய். 

அதனை நினைத்து நான் ஆறுதல் கொண்டிருக்கிறேன். 
நீ கவலைப்பட வேண்டாம்.

தலைவி தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்.  


விழுமம் = துன்பம் (எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு – திருக்குறள்)
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை குறிஞ்சி

நெகிழ்ந்த தோளும், வாடிய வரியும்,
தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி,
''யான் செய்தன்று இவள் துயர்'' என, அன்பின்
ஆழல்; வாழி! தோழி! ''வாழைக்
கொழு மடல் அகல் இலைத் தளி தலைக் கலாவும்,             5
பெரு மலை நாடன் கேண்மை நமக்கே
விழுமமாக அறியுநர் இன்று'' என,
கூறுவை மன்னோ, நீயே;
தேறுவன் மன் யான், அவருடை நட்பே.

''வரைவு நீட ஆற்றாள்'' எனக் கவன்று தான் ஆற்றாளாகிய தோழியைத் தலைமகள் ஆற்றுவித்தது.
கபிலர் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.


தலைவி, தோழி 

No comments:

Post a Comment