Pages

Thursday, 22 December 2016

நற்றிணை 307 Natrinai 307

தாவிப் பறக்கும் குதிரை பூட்டிய தேரில் 
அவர் வரும் மணியோசை கேட்கிறது. 

அவருடன் வரும் ஏவலாளர்களும் ஆரவாரம் செய்கின்றனர். 

அவர் வருகிறார். 

கடலுக்கு இடையே உள்ள தீவுநிலப் பரப்பில் 
உன்னைக் கிடத்தி 
உன் அல்குல் மேட்டைப் பாராட்டியவர் வருகிறார்.

தோழி!

அவர் நீண்ட மணல்நிலத்தின் தலைவர். 

அங்கே பார். 

முழவு போல் அடிமரம் கொண்ட புன்னை 
வணங்கி வளைந்திருக்கிறது. 

அதன் இருண்ட நிழல் பகுதியில் 
நாம் மறைந்துகொள்ளலாம். 

நள்ளிரவில் அவர் வருகிறார். 

பூ விரிந்த கானல் நிலத்தில் 
நீங்கள் இருவரும் புணரும் இடத்துக்கு வந்து 
உன்னைப் 
பூங்கொத்து மணக்கும் பொழிலில் காணாமல் 
அவர் படும் துன்பத்தைச் 
சற்றே நாம் வேடிக்கைப் பார்க்கலாம்.   

தோழி தலைவியிடம் 
இவ்வாறு கூறுகிறாள்.

இது ஒருவகைக் காதல் விளையாட்டு.
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை நெய்தல்

கவர் பரி நெடுந் தேர் மணியும் இசைக்கும்;
பெயர் பட இயங்கிய இளையரும் ஒலிப்பர்;
கடல் ஆடு வியல் இடைப் பேர் அணிப் பொலிந்த
திதலை அல்குல் நலம் பாராட்டிய
வருமே தோழி! வார் மணற் சேர்ப்பன்:               5
இறை பட வாங்கிய முழவுமுதற் புன்னை
மா அரை மறைகம் வம்மதி பானாள்,
பூ விரி கானல், புணர் குறி வந்து, நம்
மெல் இணர் நறும் பொழில் காணா
அல்லல் அரும் படர் காண்கம் நாம், சிறிதே.                                10

குறி நீட ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.
அம்மூவனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.


புன்னை

No comments:

Post a Comment