Pages

Thursday, 22 December 2016

நற்றிணை 306 Natrinai 306

தந்தை விதைத்த தினை 
அறுவடை ஆகிக் 
கிளியோட்டுதல் பணி முடிந்த பின்னர் 
நாம் எங்கு இருப்போமோ? 

குளிர் கருவியைக் கையில் வைத்துக்கொண்டு 
இவள் கிளி ஓட்டச் செல்லட்டும் என்று 
இனிமையாக என் தாய் கொடிச்சி கூறினாள். 

இப்போது கானவர் தினையைக் கொய்கின்றனர். 
வளைந்த கதிர்களைக் 
கருவிருந்து பெற்று 
இப்போது கதிர் இல்லாமல் நிற்கும் தினைத் தட்டைகள், 

விழா முடிந்த பின்னர் 
வெறிச்சோடிக் கிடக்கும் விழாக்களம் போலப் 
பாழாகிக் கிடக்கும் நிலைமையைக் காண 

இனி நாள்தோறும் நாம் வருதல் எப்படி இயலும். 

காதிலே செறிந்த தோடும், 
கையிலே ஒளிவிடும் வளையலும் 
அணிந்த குறுமகளே, 

தினை விளைந்த சிறுபுனத்திலும், 
உன் காதலனோடு 
அதன் புறத்தேயும் 
நீ இருந்த நிலைமை இனி என்ன ஆகும்?

தோழி தலைவியிடம் 
இப்படிச் 
சொல்லக் கேட்கும் தலைவன் 
தலைவியை மணந்து எய்த வேண்டும் 
என்பது குறிப்பு.

இருவி- கதிர் அறுத்த தட்டை
எல் வளை – ஒளி வீசும் வளையல்  
குளிர் – கிளியோட்ட ஒலிக்கும் கருவி
கொடிச்சி – குறிஞ்சிநிலப் பெண்
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை குறிஞ்சி

தந்தை வித்திய மென் தினை பைபயச்
சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ
''குளிர் படு கையள் கொடிச்சி செல்க'' என,
நல்ல இனிய கூறி, மெல்லக்
கொயல் தொடங்கினரே கானவர்; கொடுங் குரல் 5
சூற் பொறை இறுத்த கோல் தலை இருவி
விழவு ஒழி வியன் களம் கடுப்பத் தெறுவர,
பைதல் ஒரு நிலை காண வைகல்
யாங்கு வருவது கொல்லோ தீம் சொல்
செறி தோட்டு எல் வளைக் குறுமகள் 10
சிறு புனத்து அல்கிய பெரும் புற நிலையே?

புனம் மடிவு உரைத்துச் செறிப்பு அறிவுறீஇயது;
சிறைப்புறமும் ஆம்.
உரோடோகத்துக் கந்தரத்தனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.


குளிர் கருவி
வாழை மட்டையில் தென்னையின் ஈர்க்கு செருகி, சுழற்றி, ஒலியெழுப்பிக்கொண்டு  சிறுவர் விளையாடும் குளிர் கருவி இது.
கிளியோட்டும் ‘குளிர்’ கருவி இது போல் வலிமையான பொருள் கொண்டு செய்யப்பட்டிருக்கும்

No comments:

Post a Comment