Pages

Monday, 19 December 2016

நற்றிணை Natrinai 292

ஓங்கி உயர்ந்த குளுமையான சந்தன மரத்தின் (ஆர்) 
விரிந்த கிளைகளில் 
பசுமை நிற இலைகளுடன் கூடிய 
மணமுள்ள தமாலம் கொடி படர்ந்திருக்கும். 

அந்த மரத்தில் இருக்கும் கொம்புத் தேனை எடுப்பவர்கள் 
அந்தக் கொடியை அறுத்தெறிவர். 
அப்படிப்பட்ட 
வளம் மிக்க காட்டு வழி ஆயிற்றே என்று எண்ணாமல், 
அந்த வழியே வருகிறாய்.

ஆற்றுக்கு உருட்டி அமைக்கப்பட்ட குண்டுக் கரையில் 
உள்ள மதகுப் பகுதியில் (கயவாய்) 
யானைகள் சண்டையிட்டுக்கொள்ளும். 

அப்போது அந்த நிலப்பகுதியில் கிடக்கும் 
பளிங்குக் கற்களும் 
பொன்மணிக் கற்களும் மின்னும். 

அந்த வழியில் வருகிறாய்.

கருங்கல் மிக்க அந்தக் காட்டாற்று நீர்ச்சுழிகளில் 
முதலைகள் மேயும். 

அவற்றைப் பொருட்படுத்தாமல் வருகிறாய்.

ஐயனே! 
இப்படிப்பட்ட வழியில், 
இரவில், 
இருண்டுகிடக்கும் பனியில், 
நீ வந்தால், 
நான் உயிர்வாழ மாட்டேன்.

இவ்வாறு தலைவி கூறுவதாகத் 
தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
மணந்துகொள்ள வேண்டும் 
என்பது கருத்து.
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை குறிஞ்சி

நெடுந் தண் ஆரத்து அலங்கு சினை வலந்த
பசுங் கேழ் இலைய நறுங் கொடித் தமாலம்
தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும்,
யாணர் வைப்பின், கானம் என்னாய்;
களிறு பொரக் கரைந்த கயவாய்க் குண்டு கரை     5
ஒளிறு வான் பளிங்கொடு செம் பொன் மின்னும்
கருங் கற் கான்யாற்று அருஞ் சுழி வழங்கும்
கராஅம் பேணாய்; இரவரின்,
வாழேன் ஐய! மை கூர் பனியே!

இரவுக்குறி மறுத்தது.
நல்வேட்டனார்

இது கி.மு. காலத்துப் பாடல்.


யானைப் போர் 

No comments:

Post a Comment