Pages

Saturday, 17 December 2016

நற்றிணை Natrinai 283

துறைவ! 
இவள் கவின் தொலைய 
இவ்வாறு நடந்துகொள்ளுதல் 
உனக்குத் தகுமா 
என்று தோழி 
தலைவனை வினவுகிறாள்.

அழகிய முகம் கொண்ட மகளிர் 
கடலோரக் கழியில் 
அவர்களின் கண் போல் பூத்திருக்கும் 
நெய்தல் மலரைப் பறித்துவருவர். 

துறைவ நீ அவற்றை 
அவர்கள் மணலில் கட்டிய சிறுமனையில் 
அமர்ந்துகொண்டு 
தலைவி தலையில் 
அழகாக வைத்து அணி செய்வாய். 

அப்படிப்பட்ட துறைவன் நீ.
இவள் (என் தலைவி) 
நூல் வல்லவர்கள் ஆராய்ந்து பார்க்கும் அழகு கொண்டவள். 

அத்தகைய அழகு தொலையும்படி 
இவளை மணந்துகொள்ளாமல் காலம் கடத்தி 
இவளை வாட விடுதல் உனக்குத் தகுமா?

நீ 
திரை உலாவும் கடலில் 
பலரும் தொழும்படிக் காலையில் தோன்றிப் பாதுகாக்கும் 
ஞாயிற்றைக் காட்டிலும் கடமை தவறாதவன் ஆயிற்றே.

உன் சொல்லை நம்பி 
உன்னை விரும்பியவர்களை 
இவ்வாறு அழகு தொலைய விடுதல் தகுமா?

ஞாயிறு போல் 
காலம் தவறாத நீ 
காலத்தில் அளி செய்யாமல் 
காத்திருக்க விடலாமா?
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை நெய்தல்

ஒள் நுதல் மகளிர் ஓங்கு கழிக் குற்ற
கண் நேர் ஒப்பின கமழ் நறு நெய்தல்
அகல் வரிச் சிறு மனை அணியும் துறைவ!
வல்லோர் ஆய்ந்த தொல் கவின் தொலைய,
இன்னை ஆகுதல் தகுமோ ஓங்கு திரை   5
முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி,
ஏமுற விளங்கிய சுடரினும்,
வாய்மை சான்ற நின் சொல் நயந்தோர்க்கே?

பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது;
கடிநகர் புக்க தோழி பிற்றை ஞான்று, ''வேறுபடாது ஆற்றினாய்'' என்று சொல்லியதூஉம் ஆம்.
மதுரை மருதன் இளநாகனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.


சிற்றில் 

No comments:

Post a Comment