Pages

Friday, 16 December 2016

நற்றிணை Natrinai 282

தொளை அமைத்து 
இணக்கமாக அணிவிக்கப் பெற்றிருக்கும் 
என் வளையல்கள் தளர்கின்றன. 

பக்கம் பருத்திருக்கும் என் அல்குல் வரிப்பு வாடுகிறது. 
நெற்றி அழகை இழக்கிறது. 
அவரைப் பற்றிய நினைவு-நோய் என்னை வாட்டுகிறது. 

இவற்றிற்கெல்லாம் காரணம் அவர் தந்த காதல் நோய். 

இதனைத் தெரிந்துகொள்ளாமல், 
தாய் வேலனை அழைத்திருக்கிறாள். 
அவன் கழங்கை உருட்டிக் குறி சொல்கிறான். 

அவன் கழங்கை உருட்டுவதால் என் நோய் தணியுமாயின், 
நல்லதுதான்.

கானவன் மலைச்சாரலில் அகில் மரத்தைச் சுடுகிறான். 
அதில் தோன்றி மணக்கும் புகை 
மழை பொழியத் திரியும் மேகம் போலத் தோற்றம் அளிக்கும் 
மலையினை உடைய வெற்பன் அவன். 

அவனுடன் அமைந்த என் தொடர்பு 
வேலன் கழங்கை உருட்டினால் தணியுமா?

தலைவி தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்.
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை குறிஞ்சி

தோடு அமை செறிப்பின் இலங்கு வளை ஞெகிழ,
கோடு ஏந்து அல்குல் அவ் வரி வாட,
நல் நுதல் சாய, படர் மலி அரு நோய்
காதலன் தந்தமை அறியாது, உணர்த்த,
அணங்குறு கழங்கின் முது வாய் வேலன்  5
கிளவியின் தணியின், நன்றுமன் சாரல்
அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை,
ஆடு மழை மங்குலின், மறைக்கும்
நாடு கெழு வெற்பனொடு அமைந்த, நம் தொடர்பே?

சிறைப்புறமாகத் தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.
நல்லூர்ச் சிறு மேதாவியார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.


No comments:

Post a Comment