Pages

Friday, 16 December 2016

நற்றிணை Natrinai 281

சோழர் தம் வெற்றிக்குப் பின்னர் தங்கி மகிழும் நகரம் கழார். 
அவ்வூர் மக்கள் காக்கைக்கு சோறு வைப்பர். 
அவ்வூரிருக்கும் 
குற்றமற்ற கோயில் மரத்தில் 
அந்தச் சோற்றை எடுத்துச் சென்று 
மழையில் நனைந்துகொண்டு 
காக்கை உண்ணும். 

உண்ணும்போது, 
புலால் சோறு கிடைக்கும் என்று நினைத்து 
மாசற்ற பலிச் சோற்றைக் கீழே உதிர்க்கும். 

இப்படி உண்டு மாளாத சோற்றுவளம் உடையது 
கழார் நகரம். 

இப்படிப்பட்ட ஊரில் மழை பொழிவதால் 
இருண்டு கிடக்கும் நள்ளிரவில் 
அவர் என் பக்கத்தில் இருக்கும்போதே 
குளிரில் நடுங்கிக்கொண்டு 
நான் தூங்காமல் இருப்பேன். 

இது அவருக்குத் தொரியும். 
தெரிந்திருந்தும், 
தோழி! 
என்னைத் தனியே விட்டுவிட்டுப் 
பொருளீட்டச் சென்றவர் 
மழைக்காலம் வந்தும் திரும்பவில்லை. 

அவர் அன்பு இல்லாதவர்.
தலைவி தோழியிடம் சொல்கிறாள்.
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை பாலை

மாசு இல் மரத்த பலி உண் காக்கை
வளி பொரு நெடுஞ் சினை தளியொடு தூங்கி,
வெல் போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும்
நல் வகை மிகு பலிக் கொடையோடு உகுக்கும்
அடங்காச் சொன்றி, அம் பல் யாணர் 5
விடக்குடைப் பெருஞ் சோறு, உள்ளுவன இருப்ப,
மழை அமைந்து உற்ற மால் இருள் நடு நாள்,
தாம் நம் உழையராகவும், நாம் நம்
பனிக் கடுமையின், நனி பெரிது அழுங்கி,
துஞ்சாம் ஆகலும் அறிவோர்  10
அன்பிலர் தோழி! நம் காதலோரே.


வன்பொறை எதிர் அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது;
''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழி தலைமகட்கு உரைத்ததூஉம் ஆம்.
கழார்க் கீரன் எயிற்றியார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.


காக்கைக்குச் சோறு

No comments:

Post a Comment