Pages

Saturday, 10 December 2016

நற்றிணை Natrinai 275

வயலில் கண்ணுக்கு இனிதாக நெய்தல் பூத்திருக்கும். 
நெல் அறுக்கும்போது அறுவாளின் வாய் பட்டு 
நெய்தல் கொடியும் அறுபடும். 
நெல் அறுத்து வைத்திருக்கும் அரியோடு 
அறுபட்ட நெய்தல் சேர்ந்து கிடக்கும். 

அந்த நிலையில் தன் வருத்தம் தெரியாமல் 
அந்த நெய்தல் 
தன் மொட்டை விரித்துப் பூக்கும். 
இதுதான் நெய்தல் பூவின் பேதைமை. 

இப்படிப் பேதை நெய்தல் பூக்கும் 
சேர்ப்பு நிலத்தை உடையவன் என் தலைவன். 

அவன் வரவில்லையே என்று நான் வருந்தவில்லை. 
ஏக்க நோய் இல்லாமல் இருக்கிறேன். 

நெஞ்சில் அறமில்லாத அவன் புகழவேண்டும் என்தற்காக இருக்கிறேன். 
என்ன துன்பம் வந்தாலும், 
தோழி! 
அதனைப் பொறுத்துக்கொள்ளும் வல்லமை எனக்கு உண்டு. 

இப்படித் தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்.
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை நெய்தல்

செந்நெல் அரிநர் கூர் வாட் புண்ணுறக்
காணார் முதலொடு போந்தென, பூவே
படையொடும் கதிரொடும் மயங்கிய படுக்கைத்
தன்னுறு விழுமம் அறியா, மென்மெல,
தெறு கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும்  5
பேதை நெய்தற் பெரு நீர்ச் சேர்ப்பதற்கு
யான் நினைந்து இரங்கேனாக, நோய் இகந்து,
அறனிலாளன் புகழ, எற்
பெறினும், வல்லேன்மன் தோழி! யானே.

சிறைப்புறமாகத் தலைமகனது வரவுணர்ந்து வற்புறுப்ப, வன்புறை எதிர்மொழிந்தது.
அம்மூவனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.


நெல் அறுத்து வைக்கப்பட்டிருக்கும் அரி \ அரிகள்
நெல் அறுக்கும்போது சேர்ந்து அறுபட்ட நெய்தல் கொடி அறுபட்டுக்கிடப்பது தெரியாமல் தன் மொட்டுகளை விரிக்குமாம்

No comments:

Post a Comment