Pages

Saturday 10 December 2016

நற்றிணை Natrinai 273

தலைவி தோழியைக் கேட்கிறாள்.


தோழி! 
இது ஏன் நடக்கிறது? 
அவன் என்னை மணந்துகொள்ளவில்லையே என்று 
நான் வருந்துகிறேன். 

என் வருத்தத்தை என்னிடம் கேட்டு அறிந்துகொள்ளாத என் தாய் 
என் வருத்தத்தைக் கண்டு தான் துன்புற்று, 
வேலனை வினவ, 
அவன் “வெறி” என்று கூறுகிறான். 

இது ஏன் நடக்கிறது?

கருவண்ணம் மிகுந்த தலைமை யானை 
நீர் நிறைந்திருக்கும் நீண்ட சுனையில் நீராடுகிறது. 

அப்போது நீரலை மோதி 
என் கண்ணைப் போல் இருக்கும் நீல மலர் 
தன் கண்ணைத் திறந்து மணக்கிறது. 

இப்படி மணக்கும் குன்றத்தைக் கொண்டவன் என் தலைவன். 
அவன் நடந்துகொள்ளும் பண்பை நினைக்கும்போது நெஞ்சே நடுங்குகிறது.
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை குறிஞ்சி

இஃது எவன் கொல்லோ தோழி! மெய் பரந்து
எவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம்
வெம்மையின் தான் வருத்துறீஇ, நம் வயின்
அறியாது அயர்ந்த அன்னைக்கு, ''வெறி'' என,
வேலன் உரைக்கும் என்ப: ஆகலின்,   5
வண்ணம் மிகுந்த அண்ணல் யானை
நீர் கொள் நெடுஞ் சுனை அமைந்து, வார்ந்து உறைந்து, என்
கண் போல் நீலம் தண் கமழ் சிறக்கும்
குன்ற நாடனை உள்ளுதொறும்,
நெஞ்சு நடுக்குறூஉம், அவன் பண்பு தரு படரே?        10

தோழி தலைமகனது வரவு உணர்ந்து தலைமகட்கு உரைப்பாளாய், ''நின் வேறுபாடு தாய்க்குப் புலனாக, அவள் வேலனைக் கூவி வெறி அயரும்'' என்பது படச் சொல்லியது.
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.


நீலம் என்னும் மலர் 

No comments:

Post a Comment