Pages

Thursday, 8 December 2016

நற்றிணை Natrinai 270


வென்ற அரசன்
தோற்றுப் போரில் மாண்ட
அரசரின் மனைவிமார்
களைந்த கூந்தல் மயிரால்
கயிறு திரித்துப்
பயன்படுத்திக் கொள்வர்.

நன்னன்
‘பிண்டன்’ முதலானோரை
வென்று
இப்படிக்
கயிறு திரித்துக்கொண்டான்
என்று இப் பாடலுக்குப்
“பேராசிரியர்” உரை எழுதுகிறார்.

கடல் பிறக்கு ஓட்டிய 
செங்குட்டுவன் 
கூந்தல் முரச்சியில்
கட்டி
மோகூர் மன்னன் 
காவல் மரம் வேம்பை
வெட்டி, கட்டி
இழுத்து வந்தான்

தலைவியின் அழகினை விரும்பாமல் 
பரத்தையிடம் சென்று மீண்ட தலைவன் 
தலைவின் ஊடலைத் தீர்த்துவைக்க வேண்டும் என்று 
தோழியின் உதவியைப் பெரிதும் நாடுகிறான். 
தோழி உதவ மறுத்துத் 
தலைவியையே நாடும்படி அறிவுறுத்துகிறாள்.

தடந் தாள் தாழைக் குடம்பை, = 
அகன்ற அடிமரம் கொண்ட தாழை-மடல் குடிசையில்

நோனாத் தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்து = 
வண்டு மொய்க்கச் சோலையில் கமழும் தாங்கமுடியாத மணம்

இருள் புரை கூந்தல்
இருள் போன்ற தன் கூந்தலில்

பொங்கு துகள் ஆடி, = 
பொங்கி, மகரந்தப் பொடி கொட்டி மணக்கும்படி

உருள் பொறி போல எம் முனை வருதல், = 
உருளும் பொம்மை போல என் முன் வருகின்ற

அணித் தகை அல்லது = 
அழகிய தோற்றத்தைத் தவிர

பிணித்தல் தேற்றாப் = 
உன் மனத்தைக் கட்டிப்போடத் தெரியாத

பெருந் தோட் செல்வத்து இவளினும் = 
பருத்த தோள்நலச் செல்வத்தை உடைய இவளைக் காட்டிலும்

எல்லா! = 
ஏட

எற் பெரிது அளித்தனை, நீயே; = 
இவளைக் கூட்டுவிக்கும் என் உதவியை நீ பெரிதும் விரும்புகிறாய்.  

பொற்புடை விரி உளைப் பொலிந்த பரியுடை நன் மான் வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன் கூந்தல் முரற்சியின் கொடிதே;  = 
அழகிய பிடரி மயிர் பொலியும் குதிரை மேல் சென்று பகைவேந்தரை ஓட்டிய வேல் தாங்கிய நன்னன் பகையரசர் மகளிரின் கூந்தலால் திரித்த கயிறு போல நீ கொடியவன்.

மறப்பல் மாதோ, நின் விறல் தகைமையே. = 
ஆதலால், உன் ஆண்மை வீறாப்பை நான் மதிக்காமல் மறந்துவிடுகிறேன்.


பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை நெய்தல்

தடந் தாள் தாழைக் குடம்பை, நோனாத்
தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்து
இருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி,
உருள் பொறி போல எம் முனை வருதல்,
அணித் தகை அல்லது பிணித்தல் தேற்றாப்           5
பெருந் தோட் செல்வத்து இவளினும் எல்லா!
எற் பெரிது அளித்தனை, நீயே; பொற்புடை
விரி உளைப் பொலிந்த பரியுடை நன் மான்
வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன்
கூந்தல் முரற்சியின் கொடிதே;                10
மறப்பல் மாதோ, நின் விறல் தகைமையே.

தோழி வாயில் நேர்கின்றாள் தலைமகனை நெருங்கிச் சொல்லி, வாயில் எதிர்கொண்டது,உடனிலைக் கிளவி வகையால்.
பரணர் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

கூந்தல் முரற்சி \ முரச்சி

No comments:

Post a Comment