Pages

Thursday, 8 December 2016

நற்றிணை Natrinai 268

உயர்ந்த முகடுகள் கொண்ட மலைப் பரப்பில் 
அச்சம் தரும் சுனையில் 
நீர் பெருகும்படிப் பெருமழை பொழிந்து, 
குன்றமே குறிஞ்சிப் பூ பூத்துக் கிடக்கிறது. 

கருமையான கோல்களில் 
மென்மையாக வான் போலப் 
பூக்கும் பூ குறிஞ்சி. 

இல்லத்தில் ஓவியம் வரைந்தது போல், 
மலையில் தேன் ஊறும்படி 
குறிஞ்சி பூத்துக் கிடக்கும் நாடன் அவன். 

அவன் மீது நான் காதல் கொண்டிருக்கிறேன். 

அப்படி இருந்தும் 
வீட்டு முற்றத்தில் மணலைப் பரப்பி, 
விழாக்கோலம் செய்து, 
கழங்கினை உருட்டிக் 
குறி சொல்லும் வேலனை 
எதற்காக அழைத்து வந்திருக்கிறார்கள்?

தலைவி தோழியைக் கேட்கிறாள். 
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை குறிஞ்சி

சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க,
மால் பெயல் தலைஇய மன் நெடுங் குன்றத்து,
கருங் காற் குறிஞ்சி மதன் இல் வான் பூ,
ஓவுக் கண்டன்ன இல்வரை இழைத்த
நாறு கொள் பிரசம் ஊறு நாடற்குக்        5
காதல் செய்தவும் காதலன்மை
யாதனிற் கொல்லோ? தோழி! வினவுகம்,
பெய்ம் மணல் முற்றம் கடி கொண்டு
மெய்ம் மலி கழங்கின் வேலற் தந்தே.

தலைமகட்குச் சொல்லியது;
தலைமகன் வந்தொழுகவும் வேறுபாடு கண்டாள், ''அவன் வருவானாகவும் நீ வேறுபட்டாய், வெறி எடுத்துக் கொள்ளும் வகையான்'' என்றதூஉம் ஆம்.
வெறி பாடிய காமக்கண்ணியார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.


குறிஞ்சி மலர் 

1 comment: