Pages

Wednesday, 7 December 2016

நற்றிணை Natrinai 267

தலைவி தலைவன் உறவில் காட்டும் ஆர்வம்.

மணலில் வாழும் நண்டு 
நொச்சிப் பூவின் அரும்பு போல் கண்களை உடையது. 

சிரித்துக்கொண்டு தினை காய வைக்கும் 
மகளின் கை விரல்கள் போல், 
அது கொட்டிக் கிடக்கும் பூக்களின் மேல் நடக்கும். 

இப்படிப்பட்ட கடல்துறையின் தலைவன் அவன். 
கானலில் அவனோடு சேர்ந்து விளையாடினேன். 

அவன் வராத காலத்தில் 
தனியே வரின் புலம்பும் நிலை வரும் என்று 
கானல் துறைக்கு நான் வருவதில்லை. 

இப்போது அவன் தேர்மணி ஒலிப்பது போல் குரல் கேட்டேன். 
வந்துவிட்டேன். 

அந்த ஒலிகள் மகன் வந்திருக்கும் ஒலிகள் அல்ல; 
மீன் உண்ணும் பறவைகளின் ஒலி என்று 
இங்கு வந்துதான் தெரிந்துகொண்டேன்.

அழகிய குதிரையில் வந்திருக்கும் தலைவனே!

தலைவி கானலுக்கு வந்த செய்தியை என்னிடம் இப்படிக் கூறிக்கொண்டிருக்கும்போதே தலைவனாகிய நீ குதிரையில் வந்துவிட்டாய் என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.



பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை நெய்தல்

''நொச்சி மா அரும்பு அன்ன கண்ண
எக்கர் ஞெண்டின் இருங் கிளைத் தொழுதி,
இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர்
உணங்கு தினை துழவும் கை போல், ஞாழல்
மணம் கமழ் நறு வீ வரிக்கும் துறைவன்        5
தன்னொடு புணர்த்த இன் அமர் கானல்,
தனியே வருதல் நனி புலம்பு உடைத்து'' என,
வாரேன்மன் யான், வந்தனென் தெய்ய;
சிறு நா ஒண் மணித் தெள் இசை கடுப்ப,
இன மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலிக்குரல்,       10
''இவை மகன்'' என்னா அளவை,
வய மான் தோன்றல் வந்து நின்றனனே.

தோழி காப்புக் கைமிக்குக் காமம் பெருகிய காலத்துச் சிறைப்புறமாகச் சொல்லியது;
வரைவு கடாயதூஉம் ஆம்.
கபிலர் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

No comments:

Post a Comment