Pages

Wednesday 7 December 2016

நற்றிணை Natrinai 265

மிஞிலி காக்கும் 
நாடு பாரம் போல் மார்பு. 

ஓரி ஆளும் கொல்லிமலை மயில்தோகை போல் கூந்தல். 
இவற்றுடன் இவள் நம்மிடம் இருக்கிறாள்.

நெஞ்சே, நமக்கென்ன குறை? 
தலைவன் கூறுகிறான், 
  • மிஞிலி – வில்லோர் பெருமகன் \ வீளை ஒலி போல் அம்பு பாயும் வில்லை உடையவர்கள் மிஞிலியின் வில்லோர் \ புனத்தில் விளைந்திருக்கும் இறுகு விளைச்சலை மேயும் மான்கள் மீது அம்பு எய்பவர் அந்த வில்லோர் \ கிளைத்த கொம்பு முற்றிய நிலையில் சேற்றைக் கிண்டிக்கொண்டு செல்லும் ஆண் புள்ளிமான் மீது வில்லோர் அம்பு எய்வர் \ மிஞிலியின் தலைநகர் பாரம் \ மிஞிலி மார்பில் சந்தனம் பூசியிருப்பான் \ அழகிய கட்டுடைய தோளை உடையவன் \ மிஞிலி போல் மென்மையான மார்பகம் கொண்டவள் இவள்.
  • சென்னி – சோழ அரசன் சென்னி ‘ஆர்’ என்னும் ஆத்தி மலையைத் தலையில் சூடிக்கொண்டிருப்பான் \ சென்னி போல் பூ முடித்த தலையை உடையவள் இவள்.  
  • ஓரி – மழையைப் போலக் கொடை வழங்கி மகிழ்பவன் \ கொல்லிமலைத் தலைவன் \ இந்தக் கொல்லிமலையின் மூங்கில் காட்டில் வாழும் மயில்தோகை போல் தழைத்திருக்கும் மென்மையான கூந்தலை உடையவள் இவள்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை குறிஞ்சி


இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல்
அள்ளல் ஆடிய புள்ளி வரிக் கலை
வீளை அம்பின் வில்லோர் பெருமகன்,
பூந் தோள் யாப்பின் மிஞிலி, காக்கும்
பாரத்து அன்ன ஆர மார்பின்  5
சிறு கோற் சென்னி ஆரேற்றன்ன
மாரி வண் மகிழ் ஓரி கொல்லிக்
கலி மயில் கலாவத்து அன்ன, இவள்
ஒலி மென் கூந்தல் நம் வயினானே.

பின்னின்ற தலைமகன் நெஞ்சிற்கு உரைத்தது.
பரணர் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

வில்லோன்

No comments:

Post a Comment