Pages

Saturday 3 December 2016

நற்றிணை Natrinai 258

கதிரவன் கால் நிறுத்தி 
உப்புக்கல்லைக் காய்ச்சும் செல்வம் மிக்க நகரில், 
வருகின்ற விருந்தினர்களைப் பேணுவதற்காக, 

பொன் வளையல் அணிந்த மகளிர் 
புழைக்கடையில் காய வைத்திருந்த 
கொக்கு நகம் போன்ற கருவாட்டை (நிமிரல்), 
பச்சைநிறக் கண் கொண்ட காக்கை உண்ணும். 

பின், பொழுது இறங்கும் நேரத்தில், 
அகன்ற கடைத்தெருவில் குவித்து வைத்திருந்த 
பச்சை இறா மீனைக் கவர்ந்து சென்று, 

கடலில் நிற்கும் வங்கக் கப்பலின் பாய்மர உச்சியில் 
இருக்கை கொள்ளும். 

இப்படிப்பட்ட துறைமுக நகரம் மருங்கூர்ப்பட்டினம்.   

என் தலைவியின் உள்ளம் கொண்ட கொண்கனே! 

பூத்துக் குலுங்கும் கடல் பூங்காவில் 
உன்னை மருவியிருந்த என் தலைவியுடன் 
நான் திரும்பிச் செல்கிறேன். 

இவள் தாய் 
நாளை முதல் 
இவள் வீட்டை விட்டு வெளியில் செல்லக்கூடாது 
என்று எச்சரித்து இன்று அனுப்பியுள்ளாள்.

இவள் மருங்கூர்ப்பட்டினம் போன்ற அழகி. 
ஒளிரும் வளையல்கள் 
இவள் கையிலிருந்து நழுவுவதைக் பார்த்து 
இவ்வாறு கூறிவிட்டாள்.  

இதனைத் தெரிந்துகொள், 
என்று தோழி தலைவனுக்குத் தெரிக்கிறாள். 

திருமணம் செய்கொண்டு இவளைப் பெறலாம் என்பது கருத்து.
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை நெய்தல்

பல் பூங் கானல் பகற்குறி மரீஇ
செல்வல் கொண்க! செறித்தனள் யாயே
கதிர் கால் வெம்பக் கல்காய் ஞாயிற்றுத்
திருவுடை வியல் நகர் வரு விருந்து அயர்மார்,
பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த    5
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி, எல் பட,
அகல் அங்காடி அசை நிழல் குவித்த
பச்சிறாக் கவர்ந்த பசுங் கட் காக்கை
தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும்
மருங்கூர்ப் பட்டினத்து அன்ன, இவள்     10
நெருங்கு ஏர் எல்வளை ஓடுவ கண்டே.

தோழி செறிப்பு அறிவுறீஇயது.
நக்கீரர் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.


வங்கம் \ பாய்மரக் கப்பல் 

No comments:

Post a Comment