Pages

Saturday 3 December 2016

நற்றிணை Natrinai 257

மழை பொழிந்து 
அருவி கொட்டும் 
மூங்கில் ஓங்கிய மலைப்பிளவில் 
வேங்கை மலர்ந்து 
பாறையில் கொட்டும் நாட்டை உடையவனே! 

கொடிய விலங்குகள் நடமாடும் 
ஆள் நடமாட்டம் இல்லாத வழி என அறிந்திருந்தும் 
இவளுக்காக நள்ளிரவில் வருகிறாய்; 
நான் வருந்துகிறேன்; 
மணந்துகொண்டு இல்லத்திலேயே இன்புற வேண்டுகிறேன்; 
என்று தோழி தலைவனுக்கு அறிவுறுத்துகிறாள்.
  • மழை = மழைமேகம் \ தளி = மழைத்துளி – இடை விடாத இடி முழக்கத்துடன் பொழிகிறது.  
  • சிலம்பு = மழை பொழிவதால் குளிரும் மலைக்காடு
  • நளிர் = குளிர்
  • உயர்நெடுங்கோடு – மூங்கில் அடர்ந்து உயர்ந்த மலை முகடு
  • அமல்பு = அடர்ந்து
  • கவாஅன் – ஒளிறும் அருவியுடன் கூடிய மலைப்பிளவு
  • வேங்கை – கருமையான அடிமரம் கொண்டது. மணக்கும் பொன்னிற மலர்களைக் கொண்டது.
  • அயம் = நீர்க்கசிவு

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை குறிஞ்சி

விளிவு இல் அரவமொடு தளி சிறந்து உரைஇ,
மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின்,
கழை அமல்பு நீடிய வான் உயர் நெடுங் கோட்டு
இலங்கு வெள் அருவி வியன் மலைக் கவாஅன்
அரும்பு வாய் அவிழ்ந்த கருங் கால் வேங்கைப்   5
பொன் மருள் நறு வீ  கல்மிசைத் தாஅம்
நல் மலை நாட! நயந்தனை அருளாய்,
இயங்குநர் மடிந்த அயம் திகழ் சிறு நெறிக்
கடு மா வழங்குதல் அறிந்தும்,
நடு நாள் வருதி; நோகோ யானே.            10

தோழி தலைமகனது ஏதம் சொல்லி வரைவு கடாயது.
வண்ணக்கன் சோருமருங் குமரனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

வேங்கை மரம், மலர்

No comments:

Post a Comment