Pages

Saturday 3 December 2016

நற்றிணை Natrinai 256

தலைவியின் உடன்போக்கைத் தவிர்ப்பதற்கான காரணங்களைத் தலைவன் தலைவிக்கு விளக்குகிறான்.

நீ, புலவர்கள் பாராட்டும் 
மாசு மறுவற்ற சிறந்த சிறிய காலடிகளை உடையவள். 

நலமெல்லாம் குடிகொண்டு ஆசை மூட்டும் கண்களை உடையவள்.

காடு, நிழல் இல்லாமல் 
தீப் பற்றி எரிந்த மரங்களுடன் 
நலம் சிதைந்து 
வழிப்போக்கர் இல்லாமல் 
தனிமைப் பட்டுக் கிடக்கிறது.

இதனால் கோடைக் காலத்தில் 
உன்னை என்னுடன் அழைத்துச் செல்வதைக் கைவிட்டுவிட்டேன்.

பிடவம் பூ பூத்து, 
களாப்பழம் பழுத்து 
மணம் கமழும் கண்ணுக்கு இனிய மழைக் காலத்தில் 
செல்லலாம் என்றால், 
களாவில் முட்கள் இருக்கின்றன. 

ஆண்மான் இரலை பெண்மான் பிணையைத் தழுவிக்கொண்டு 
வயிரம் பாய்ந்த 
முள்ளுடன் கூடிய வேல மரத்து நிழலில் 
கண்ணைக் கவரும் வண்ணம் வாழ்கின்றன. 

அப்படிப்பட்ட முள்ளு மரத்தடியில் நம்மால் தங்க இயலாது.

எனவே உன்னை அழைத்துச் செல்வதைத் தவிர்க்கிறேன்.
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை பாலை

நீயே, பாடல் சான்ற பழி தபு சீறடி,
அல்கு பெரு நலத்து, அமர்த்த கண்ணை;
காடே, நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்த,
புலம்பு வீற்றிருந்து நலம் சிதைந்தனவே;
இந் நிலை தவிர்ந்தனம் செலவே: வைந் நுதிக்   5
களவுடன் கமழ, பிடவுத் தளை அவிழ,
கார் பெயல் செய்த காமர் காலை,
மடப் பிணை தழீஇய மா எருத்து இரலை
காழ் கொள் வேலத்து ஆழ் சினை பயந்த
கண் கவர் வரி நிழல் வதியும்  10
தண் படு கானமும் தவிர்ந்தனம் செலவே.

''பொருள்வயிற் பிரிந்தான்'' என்று ஆற்றாளாகிய தலைமகளைத் தலைமகன் ஆற்றியது.
பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.


இரலை, பிணை மான்கள்
ஆண், பெண் மான்கள்

No comments:

Post a Comment