Pages

Friday 2 December 2016

நற்றிணை Natrinai 255

தலைவி தோழியிடம் சொல்கிறாள். 

இன்று அவர் வராமல் இருந்தால் நல்லது. 
கழுதுப்பேய் நடமாடும் என்று அஞ்சி ஊரே உறங்கிக்கொண்டிருக்கிறது.

ஊரைக் காக்கும் கானவர் 
வழக்கமாக அச்சம் தரும் 
குறிஞ்சிப் பண்ணைப் பாடிக்கொண்டு 
உறங்காமல் இருக்கின்றனர். 

காட்டில் வலிமை மிக்க யானையோடு போரிட்ட வரிப்புலி 
தன் கல்லுக் குகையில் இருந்துகொண்டு குழுமுகிறது. \

அன்னோ! 
(அன்னோ என்பது கேள் என்னும் பொருள் தரும் இடைச்சொல்) 
அவர் இல்லாமல் 
என் மென்மையான தோள் சோர்ந்து வருந்தினாலும் 
பரவாயில்லை. 

இன்று அவர் வராமல் இருந்தால் நல்லது
(மன், தில்ல – மன உறுதியை உணர்த்தும் இடைச்சொற்கள்) 

மலையடுக்கத்தில் 
மின்னலும் இடியுமாக மழை பொழிந்துகொண்டிருக்கும் 
நள்ளிரவு இது. 

அவர் வரும் வழியில் மேயும் 
படமெடுத்தாடும் நச்சுப்பாம்பு வருந்தும்படி 
இடி முழங்குகிறது.
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை குறிஞ்சி

கழுது கால் கிளர ஊர் மடிந்தன்றே;
உரு கெழு மரபின் குறிஞ்சி பாடி,
கடியுடை வியல் நகர்க் கானவர் துஞ்சார்;
வயக் களிறு பொருத வாள் வரி உழுவை
கல் முகைச் சிலம்பில் குழுமும்; அன்னோ!       5
மென் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும், இன்று அவர்
வாரார்ஆயினோ நன்றுமன் தில்ல
உயர் வரை அடுக்கத்து ஒளிறுபு மின்னிப்
பெயல் கால்மயங்கிய பொழுது கழி பானாள்,
திருமணி அரவுத் தேர்ந்து உழல,            10
உருமுச் சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறே!

ஆறு பார்த்து உற்றது.
ஆலம்பேரி சாத்தனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.


தலைவியும், தோழியும்

No comments:

Post a Comment