Pages

Thursday 1 December 2016

நற்றிணை Natrinai 251

உயர்ந்த அருவி கொட்டி நீர் பாயும் பாட்டம் நிலத்தில், 
பலவாக அடிமரம் பிணித்துக்கொண்டிருக்கும் 
வாழை மரத்தில் உள்ள கொழுத்த பழங்களைப் 
பெண்குரங்கு மந்தி கவர்ந்து உண்ணும் மலையின் 
நாடன் அவன். 

தினையே! 

அவனை விரும்பிய உள்ளத்தோடு, 
நானும் என் தோழியும் உன்னைக் காத்துவந்தோம். 

இது உனக்குத் தெரியும். 

என் தளிர் பொன்ற மேனி இப்போது அழகினை இழந்துவிட்டது. 
என் தாய் என்னை வீட்டில் 
அவள் காவலில் வைத்திருக்கிறாள். 

ஆட்டுக்குட்டி போன்ற ‘பலி’ கேட்கும் 
முருகக் கடவுளைப் பேணுகிறாள். 

நான் உன்னைக் காக்க வரமாட்டேன். 
உன் கதிர்களைப் (பீள்) பறவைகள் கவரும். 

ஆதலால் இப்போது உன் தோடுகளுக்கு இடையே 
கதிர் வாங்கி நீ விளையாதே. 

காலம் தாழ்த்தி விளைக. 
தினையே! 
நீ வாழ்க. 
இவ்வாறு தலைவி தினையிடம் பேசுகிறாள்.
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை குறிஞ்சி

நெடு நீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண்,
பிணி முதல் அரைய பெருங் கல் வாழைக்
கொழு முதல் ஆய் கனி மந்தி கவரும்
நல் மலை நாடனை நயவா, யாம், அவன்
நனி பேர் அன்பின், நின் குரல் ஓப்பி,     5
நின் புறங்காத்தலும் காண்போய், நீ? என்
தளிர் ஏர் மேனித் தொல் கவின் அழிய,
பலி பெறு கடவுட் பேணி, கலி சிறந்து,
நுடங்கு நிலைப் பறவை உடங்கு பீள் கவரும்;
தோடு இடம் கோடாய், கிளர்ந்து,             10
நீடினை விளைமோ! வாழிய, தினையே!

சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.
மதுரைப் பெருமருது இளநாகனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.


தினை
தோடுகளுக்கு இடையே பீள் (கதிர்) 

No comments:

Post a Comment