Pages

Saturday, 26 November 2016

நற்றிணை Natrinai 241

தோழி தலைவியிடம் சொல்கிறாள்.

தோழி! 

அவர் உன்னை நினைக்கமாட்டோரோ? 
நினைக்கவில்லையோ?

நீர் வற்றிய மணல் வெளியில், 
வளைந்த சிறகை உடைய பறவைகளின் காலடிக் கோடுகள் 
பதிந்த இடங்களில் மோதி 
வாடைக்காற்று வீசுகிறது. 

பேய்க்கரும்பின் வெண்ணிறப் பூக்கள் 
வேந்தனுக்கு வீசும் கவரி போல் பூத்து 
அழகுடன் வாடைக் காற்றில் ஆடுகின்றன. 

மழை பொழிந்து நின்ற பின்னர் 
விழித்து இமைப்பது போல 
ஞாயிறு தோன்றி வெளிச்சமிட்டு மறைந்துவிட்டது. 

பகல் போய்விட்ட காலத்தில் 
வெள்ளைநிறம் தோன்றப் 
பனியானது கால் இறங்கிப் பொழியும் 
துன்பம் தரும் யாமத்தில் 
உன் கண்கள் கண்ணீர் விட்டு அழுகின்றன. 

இப்படி உன்னை விட்டுவிட்டு 
நிலையில்லாத பொருளைச் சேர்த்துக்கொண்டு வரப் 
பிரிந்து சென்ற அவர் உன்னை நினைக்க மாட்டாரா?
  • எல்லை = பகல்
  • எல் = ஒளி

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை பாலை

உள்ளார் கொல்லோ தோழி! கொடுஞ் சிறைப்
புள் அடி பொறித்த வரியுடைத் தலைய
நீர் அழி மருங்கின் ஈர் அயிர் தோன்ற,
வளரா வாடை உளர்பு நனி தீண்டலின்,
வேழ வெண் பூ விரிவன பலவுடன்,      5
வேந்து வீசு கவரியின், பூம் புதல் அணிய,
மழை கழி விசும்பின் மாறி ஞாயிறு
விழித்து இமைப்பது போல் விளங்குபு மறைய,
எல்லை போகிய பொழுதின் எல் உற,
பனிக்கால் கொண்ட பையுள் யாமத்து,              10
பல் இதழ் உண்கண் கலுழ,
நில்லாப் பொருட்பிணிப் பிரிந்திசினோரே?

தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது.
மதுரைப் பெருமருதனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

இருபுறமும் நிற்போர் கவரி வீசுகின்றனர்

கவரி

வேழம் என்னும் பேய்க்கரும்பு
இதன் பூ கவரி போல் உள்ளது \ பாடல்

No comments:

Post a Comment