Pages

Friday, 25 November 2016

நற்றிணை Natrinai 233

தன் தொழிலை அன்றி வேறொன்றையும் கல்லாத 
ஆண்குரங்கு நடுங்கும்படி 
முள்ளைப் போன்ற பற்களும், 
மடமைத் தன்மையும் 
பெரிய உருவமும் கொண்ட பெண்குரங்கு 
தன் குட்டியுடன் 
முகடுகள் உயர்ந்த மலையக்கத்தில் தவழும் 
மழைமேக மூட்டத்தில் ஒளிந்துகொள்ளும் 
பெருமலை நாட்டை உடையவனுக்கே 

அருள் வழங்கியவள் நீ. 
இனி நீ நான் சொல்வதைக் கேட்கமாட்டாய். 

என்றாலும் வீணாக ஒன்றை உனக்குக் கூறிவைக்கிறேன். 
தோழி! இதனைக் கேள். 
அவன்மீது முன்பே அன்பு கொண்ட நெஞ்சத்தில் ஆர்வத்தைப் பொதித்து வைத்துள்ளாய். 

அவன் ஆன்றோர் செல்லும் வழியிலிருந்து வழுவாமல் நடந்துகொள்ளும் சான்றோனாகத் திகழவேண்டும் 
என்பதை நன்றாக உணர்ந்து தெளிந்துகொண்டு 
அவனோடு பழகுவாயாக.

தோழி தலைவிக்கு இவ்வாறு அறிவுரை கூறுகிறாள்.
  • கடுவன் = ஆண்குரங்கு \ மந்தி = பெண்குரங்கு
  • என = எனது சொற்கள்
  • நார் = அன்பு \ ஈரம் = ஆர்வப் பதிவு
  • ஆன்றோர் = பரந்த அறிவு உடையவர் \ சான்றோர் = சால்புடன் நடந்துகொள்ளும் பொறுமை கொண்டவர்

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை குறிஞ்சி

கல்லாக் கடுவன் நடுங்க, முள் எயிற்று
மட மா மந்தி மாணா வன் பறழ்,
கோடு உயர் அடுக்கத்து, ஆடு மழை ஒளிக்கும்
பெருங் கல் நாடனை அருளினை ஆயின்,
இனி என கொள்ளலை மன்னே; கொன் ஒன்று   5
கூறுவென் வாழி தோழி! முன்னுற
நாருடை நெஞ்சத்து ஈரம் பொத்தி,
ஆன்றோர் செல் நெறி வழாஅச்
சான்றோன் ஆதல் நன்கு அறிந்தனை தெளிமே.

வரையாது நெடுங்காலம் வந்து ஒழுக, இவள் ஆற்றாள் என்பது உணர்ந்து, சிறைப் புறமாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது.
அஞ்சில் ஆந்தையார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

இடப்புறம் கடுவன் என்னும் ஆண்குரங்கு, மடியில் பறழுடன் (குட்டியுடன்) \ வலப்புறம் மந்தி என்னும் பெண்குரங்கு, ஆணை விட உருவத்தில் பெரியது

2 comments:

  1. மிகவும் தெளிவாக உள்ளது. பதிவு செய்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டு பெறும் பேறு பெற்றுள்ளேன்

      Delete