Pages

Wednesday, 23 November 2016

நற்றிணை Natrinai 225

முருகக் கடவுள் போன்ற வலிமையோடு தன் சினத்தால் செருக்குற்று போரிட்ட யானையின் வெள்ளைக் கொம்பு கரை படிந்து சிவப்பாக ஏந்திய (மேலே வளைந்த) நிலையில் காணப்படுவது போலவும், 

தன் கூரிய முனையுடன் காணப்படும் வாழைப்பூ மொட்டு போலவும், 

மென்மை இயல்புடைய மகளிரின் ஓதிக் கொண்டை போலவும், 

தோன்றும் முலை, 
திருந்திய அணிகலனும், எழுதிய தொய்யிலும் கொண்ட முலை 

உடையவர் யாரேனும் நாடனை தன் பருவரல் திணவு தீரும்படி முயங்கும்படி கேட்டுகொண்டவர் உண்டோ, 

தோழி! 

அவனை நயந்து வாழும் எனக்கு உதவாத அன்பு இல்லாத மார்பினைக் கொண்டவனாக அவன் இருக்கிறானே, 

என்று காமக்கிழத்தி தன் தோழியிடம் கலங்கிக் கூறுகிறாள். 
  • முன்பு = வலிமை
  • வை = கூர்மை
  • பருவரல் = திணவுத் துன்பம்
  • நார் = அன்பு 

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை குறிஞ்சி

முருகு உறழ் முன்பொடு கடுஞ் சினம் செருக்கிப்
பொருத யானை வெண் கோடு கடுப்ப,
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை,
மெல் இயல் மகளிர் ஓதி அன்ன
பூவொடு, துயல் வரும் மால் வரை நாடனை     5
இரந்தோர் உளர்கொல் தோழி! திருந்து இழைத்
தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்பப்
பயந்து எழு பருவரல் தீர,
நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே?

வன்புறை எதிர் அழிந்தது;
பரத்தை தலைமகட்குப் பாங்காயின வாயில் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்.
கபிலர் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

முலை 

No comments:

Post a Comment