Pages

Tuesday, 22 November 2016

நற்றிணை Natrinai 224

அவர் மிகுந்த அன்பினை உடையவர்; மேலும் மிகவும் பெருந்தன்மை உடையவர்; அவர் பின்பனிக்காலத்தில் வரவிருக்கிறார்; என்றெல்லாம் எண்ணி, முன்பனிக் காத்திலேயே குரவ மரங்கள் கொழுந்துகளுக்கு இடையே அரும்பு விட்டிருக்கின்றன. முன்பு கூடித் திளைத்தீர்கள், பின்பும் கூடித் திளைத்து மகிழுங்கள் என்று சொல்லுவன போலச், சிவந்த கண்ணும், கரிய நிறமும் கொண்ட குயில்கள் அந்தப் பூங்கொத்துகளில் இருந்துகொண்டு கூவும் இன்பம் தரும் இளவேனில் காலமும் வந்துவிட்டது.  

“பிரியமாட்டோம்” என்று நம்மைத் தெளியவைக்கச் சொன்னவர் பிரிந்து சென்றுள்ள நாட்டில் எப்படி இருக்குமோ? எப்படி அவருக்குச் சொல்லுவேன்? 

குளத்தில் நீர் இல்லாமல் வற்றிப்போய், அதன் குழிக் கண்கள் வறண்டு கிடக்கும் வழியில், மரத்துக்குப் பின்னால் வில்லோர் காத்திருக்கும் போர்முனைப் பிரிவுப்பாதை வழியில், பாலைநில வழியில் துணிவுடன் சென்றாரே, 

அவருக்கு எப்படிப் பருவ வரவைச் சொல்லுவேன்? தலைவி தன் தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்.
  • கயன் அற – அற என்பது உயிர்முதல் சொல். கயம் என்னும் சொல்லின் முன் அற என்னும் சொல் வரும்போது கயம் என்னும் சொல் கயன் என நின்று புணரும் \ “மகரத் தொடர்த்மொழி மயங்குதல் வரைந்த னகரத் தொடர்மொழி ஒன்பது” என்று வர்ரையறுத்துக் காட்டும் 9 சொற்களில் அடங்காத சொல் ஆதலால், கயம் என்பது கயன் என மயங்கியுள்ளது. \ கயம் > கயன் = குளம்

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை பாலை

அன்பினர், மன்னும் பெரியர்; அதன்தலை,
''பின்பனி அமையம் வரும்'' என, முன்பனிக்
கொழுந்து முந்துறீஇக் குரவு அரும்பினவே;
''புணர்ந்தீர் புணர்மினோ'' என்ன, இணர்மிசைச்
செங் கண் இருங் குயில் எதிர் குரல் பயிற்றும்    5
இன்ப வேனிலும் வந்தன்று; நம்வயின்
''பிரியலம்'' என்று, தெளித்தோர் தேஎத்து,
இனி எவன் மொழிகோ, யானே கயன் அறக்
கண் அழிந்து உலறிய பல் மர நெடு நெறி
வில் மூசு கவலை விலங்கிய 10
வெம் முனை அருஞ் சுரம் முன்னியோர்க்கே?

தோழியால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகள் பெயர்த்தும் சொல் கடாவப்பட்டு,''அறிவிலாதேம் என்னை சொல்லியும், பிரியார் ஆகாரோ?'' என்று சொல்லியது.
பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

தலைவி, தோழி 

No comments:

Post a Comment