Pages

Sunday, 20 November 2016

நற்றிணை Natrinai 215

கிழக்குக் கடலிலே தோன்றிய பகல்-செல்வன் தன் செந்நிறக் கதிரைப் பரப்பி மேற்கு மலையில் மறைந்து தனிமை தரும் மாலை வேளை வந்ததுவிட்டது. 

வளையல் அணிந்த மகளிர் வீட்டு விழாவாக மீன் கொழுப்பை உருக்கி எடுத்த எண்ணெய்யில் விளக்கு ஏற்றுவர்

நீலநிறப் பரப்பில் அலைகள் மோதிக்கொண்டிருக்கும். 
கரையை ஒட்டினாற் போல இருக்கும் பாக்கம் ‘கல்’ என்று அமைதியாக இருக்கும். 

ஐய! இன்று இந்த ஊரில் இவளோடு தங்கினால் என்ன

சிவந்த காலோடு முடிந்துள்ள வலையை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்ற சுறா மீனைப் பிடிக்கும் குறிக்கோளுடன் வலிமையாக வேட்டையாடிக்கொண்டிருக்கும் எம்மவர் வேட்டை கிடைக்காமல் திரும்பமாட்டார்கள்.
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை நெய்தல்

குண கடல் இவர்ந்து, குரூஉக் கதிர் பரப்பி,
பகல் கெழு செல்வன் குடமலை மறைய,
புலம்பு வந்து இறுத்த புன்கண் மாலை,
இலங்கு வளை மகளிர் வியல் நகர் அயர,
மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண் சுடர் 5
நீல் நிறப் பரப்பில் தயங்கு திரை உதைப்ப;
கரை சேர்பு இருந்த கல்லென் பாக்கத்து,
இன்று நீ இவணை ஆகி, எம்மொடு
தங்கின் எவனோ தெய்ய? செங்கால்
கொடு முடி அவ் வலை பரியப் போகிய    10
கோட் சுறாக் குறித்த முன்பொடு
வேட்டம் வாயாது எமர் வாரலரே.

பகற் குறி வந்து மீள்வானை ''அவள் ஆற்றும் தன்மையள் அல்லள்; நீயிர் இங்குத் தங்கற் பாலீர்; எமரும் இன்னது ஒரு தவற்றினர்'' எனத் தோழி தலைமகற்குச் சொல்லியது.
இரவுக் குறி மறுத்து வரைவு கடாயதூஉம் ஆம்.
மதுரைச் சுள்ளம் போதனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.


கடலில் வலை வீசி மீன் பிடித்தல் 

No comments:

Post a Comment