Pages

Wednesday, 16 November 2016

நற்றிணை Natrinai 206

நாடன் கேண்மை அறிந்தனள் கொல்லோ


தினை கதிர் வாங்கி வளைந்து நிற்கிறது. 
அதன் கதிர் விரிந்த தலையுடனும், குழந்தை பெற்றவளுக்கு ஊறுவது போல் உறும் பாலுடனும் இலைத் தோட்டில் ஆடிக்கொண்டிருக்கிறது. 

அதனை உண்பதற்காகச் சிவந்த வாயும் பச்சை நிறமும் கொண்ட கிளிகள் பெருங்கல் பாறையில் குழுமியுள்ளன. 

“கிளிகள் குவிந்துள்ளன. 
அவற்றை தட்டைக் கருவியைப் புடைத்தும், 
கவணையில் கல் தொடுத்தும் ஓட்டுங்கள்” என்று சொல்லி, 

தந்தை அனுப்பிவைத்துள்ளான். 

தாய் “நல்ல நாளில் வேங்கைப் பூ மலரட்டும்” என்று சொல்லி என் (தோழி) முகத்தைப் பார்த்தாள். 

தோழி (தலைவியை) எதற்காக இப்படிச் சொல்லிவிட்டுப் பார்த்தாள்? 

இவள் செல்ல விடுவாளா? 
ஏதாவது நேர்ந்தால் வீட்டில் அடைத்துவைக்கப் போகிறாளா? 

கல்மலை நாடனோடு உனக்கு இருக்கும் நட்பை ஒருவேளை அறிந்திருப்பாளோ? 
எனக்கு ஒன்றும் தெரியவில்லையே.

தோழி தலைவியிடம் இவ்வாறு கூறுகிறாள்.
கேட்டுக்கொண்டு காத்திருக்கும் தலைவன் மணந்துகொள்ளவேண்டும் என்பது உரையாடலின் உள்ளக் கிடக்கை.
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை குறிஞ்சி

''துய்த் தலைப் புனிற்றுக் குரல் பால் வார்பு இறைஞ்சி,
தோடு அலைக் கொண்டன ஏனல் என்று,
துறு கல் மீமிசைக் குறுவன குழீஇ,
செவ் வாய்ப் பாசினம் கவரும்'' என்று, அவ் வாய்த்
தட்டையும் புடைத்தனை, கவணையும் தொடுக்க'' என 5
எந்தை வந்து உரைத்தனனாக, அன்னையும்,
''நல் நாள் வேங்கையும் மலர்கமா, இனி'' என
என் முகம் நோக்கினள்; எவன்கொல்?-தோழி!-
செல்வாள் என்றுகொல்? ''செறிப்பல்'' என்றுகொல்?
கல் கெழு நாடன் கேண்மை   10
அறிந்தனள்கொல்? அஃது அறிகலென் யானே!

தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.
ஐயூர் முடவனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

செவ்வாய்ப் பாசினம்


துறுகல் மீமிசைக் கிளிகள் 

No comments:

Post a Comment