Pages

Friday, 25 November 2016

நற்றிணை Natrinai 234


சான்றோர் பலர் வருத்தத்தோடு பரிசப் பொருள்களைச் சுமந்துகொண்டு இவளைப் பெண் கேட்க வந்துள்ளனர். 

இதனை மனத்தில் கொண்டும், 
வானளாவிய உன் குடிப்பெருமையை எண்ணிப் பார்த்தும், 
அவர்கள் தந்த அழகிய மணிக் கற்கள் காலை உருத்தும் 
முன்றத்தை ஏற்றுக்கொண்டும் 
இவள் முலையை 
இவளை விரும்பும் தலைவனுக்கே வழங்கினால் நல்லது. 

அப்படி இல்லாமல் மேலும் பெரும்பொருள் கருதுவீராயின், 
அப்பொருள் 
உறையூரோடு வஞ்சி நகரையும் சேர்த்துப் பிறர் வழங்குவராயினும் 
அப் பொருள் இவளைப் பொருத்த மட்டில் சிறிதாகவே மதிக்கப்படும்.

(பெண் கேட்டு வந்துள்ள  தலைவனையே இவள் விரும்புகிறாள், என்று செவிலி தலைவியின் பெற்றோருக்குத் தெரிவிக்கிறாள்.)
  • உறந்தை – உறையூர். செம்பியன் பங்குனி விழாக் கொண்டாடும் உறையூர். சோழ அரசன் செம்பியனின் தலைநகரம்.
  • செம்பியன் - வெண்கொற்றப் குடையுடன் கழுமலம் நகரைக் கைப்பற்றிய சோழ அரசன். நல்ல தேரில் உலா வருபவன்.
  • வஞ்சி – உள்ளி விழா நடைபெறும் ஊர். சேரனின் தலைநகரம்.
  • சான்றோர் = படை வீரர்கள்


பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை குறிஞ்சி

சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது
வான் தோய்வு அன்ன குடிமையும் நோக்கித்
திரு மணி வரன்றும் குன்றம் கொண்டு இவள்
வரு முலை ஆகம் வழங்கினோ நன்றே
அஃது ஆன்று     5
அடை பொருள் கருதுவிர் ஆயின் குடையொடு
கழுமலம் தந்த நல் தேர்ச் செம்பியன்
பங்குனி விழவின் உறந்தையொடு
உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே.

செவிலியால் அறத்தொடு நிற்கப்பட்ட நற்றாய், தந்தை முதலியோர்க்கு அறத்தொடு நின்றது.
ஆசிரியர் பெயர் தெரியவில்லை

இது கி.மு. காலத்துப் பாடல்.

வழக்கம்


இந்தப் பாடல் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ஆசிரியர் குழு பதிப்பில் பிற்சேர்க்கையாகத் தரப்பபட்டுள்ளது. இரண்டாம் பதிப்பு 1981

No comments:

Post a Comment