வேங்கை மலர் போல் அவள் கூந்தல் மணக்கும்.
பொருளீட்டப் பாலைநில வழியில் செல்லும்போது
தலைவன் தலைவியை நினைக்கிறான்.
1
அகன்ற வானத்தில் மயங்கும் இருள் பரந்துள்ளது.பகலை ஆற்றுப்படுத்தி விட்டோமே என்று துன்பப் பட்டுக்கொண்டிருக்கும் மாலைப் பொழுது தன்னைத்தானே சினந்துகொண்டு பசந்து கிடக்கிறது.நடுகல் உருவத்தை ஆள் என்று கருதிய யானை காலால் உதைத்துக் காலின் நகம் பனைமர மடலின் காம்பு (இதக்கை) ஒடிந்து தொங்குவது போல முரிந்து தொங்குகிறது.இப்படிப்பட்ட வழியில் அம்பு எய்து வழிப்பறி செய்ய யாரும் வராமையால் கொடுமையான கண் கொண்ட ஆடவர் தன் துன்பத்தைப் போக்க யாராவது வருவார்களா என்று தேடிக்கொண்டிருக்கின்றனர்.என் நெஞ்சே! இப்படிப்பட்ட வழியில் கோடைக்காலத்தில் என்னை அழைத்து வந்துவிட்டாய்.
2
இப்படித் துன்பத்தைச் செய்துவிட்டு, நெஞ்சே! இப்போது அந்தத் துன்பத்தைத் தாங்க முடியாமல் திரும்பிச் செல்ல நினைக்கிறாய்.
3
வெற்றி வேலைத் தாங்கும் கொடையாளி கழுவுள் அரசன் ஆளும் காமூரில் பூதச் சிலை நிற்கும் வேங்கை மரத்தில் பூத்திருக்கும் புதிய மலர் போல மண ஈரம் கமழும் கூந்தலை உடைய மடந்தையாகிய என் காதலியைச் செல்லும் வழியில் நினைக்கிறாய்.
இது சரியா?
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை பாலை
1
அகல் வாய் வானம்
மால் இருள் பரப்ப,
பகல் ஆற்றுப்படுத்த பையென்
தோற்றமொடு
சினவல் போகிய புன்கண்
மாலை,
அத்த நடுகல் ஆள்
என உதைத்த
கான யானைக் கதுவாய்
வள் உகிர், 5
இரும் பனை இதக்கையின்,
ஒடியும் ஆங்கண்,
கடுங்கண் ஆடவர் ஏ முயல்
கிடக்கை,
வருநர் இன்மையின் களையுநர்க்
காணா
என்றூழ் வெஞ் சுரம்
தந்த நீயே
2
துயர் செய்து ஆற்றாயாகி,
பெயர்பு, ஆங்கு 10
உள்ளினை வாழிய, நெஞ்சே!
வென் வேல்
3
மா வண் கழுவுள்
காமூர் ஆங்கண்,
பூதம் தந்த பொரி
அரை வேங்கைத்
தண் கமழ் புது
மலர் நாறும்
அம் சில் ஓதி
ஆய் மடத் தகையே. 15
தலைமகன் இடைச் சுரத்து
நின்று சொல்லியது.
மதுரை மருதன் இளநாகனார்
பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்

No comments:
Post a Comment