Pages

Wednesday, 26 October 2016

அகநானூறு Agananuru 362

"உன்னை அவருக்குத் தா" என்று தோழி தலைவிக்குச் சொல்கிறாள். 


பாம்பு வாழும் மலைப் பிளவுகளிலிருந்து இறங்கி வரும் குளிர்ந்த நீர் அந்த மலைப் பிளவுகளில் இருக்கும் தேனோடு கலந்து ஆற்றில் நிறைந்து வருகிறது. 

வெண்ணிறக் கொம்புகளை உடைய யானையோடு போரிட்ட ஆண்புலி புண்பட்டுத் தன் குகையில் பதுங்கிக்கொண்டது. 

முருக்கம்பூ போன்ற நகம் கொண்ட பெண்புலி அதனை விலக்கி நிறுத்தியது. 

இப்படிப்பட்ட வழியில் யாரும் செல்வதில்லை. 
ஆனால் அப்படிப்பட்ட வழியில் இவர் வந்திருக்கிறார். 
இருட்டிக் கிடக்கிறதே என்று எண்ணாமல் வந்திருக்கிறார். 
வெற்றி வேலைக் கையில் வைத்துக்கொண்டு வந்திருக்கிறார். 

பெறலாம் என்னும் ஆசையோடு வந்திருக்கிறார். 
அவர் நன்னராளன் (நல்லவன்)
உன்னைப் பெறாமல் நெஞ்சு நொந்து, வெறுமனே அவர் திரும்பினால் நாம் இப்போது நல்லபடியாக வாழமுடியாது. 

தோழி! உன் முலை நிலாப் போல ஒளி வீசுகிறதே, 
அது எதற்காக? 
அவருக்குக்காகத் தானே. 
உன்னை அவருக்குத் தா.

முலையில் நிலாக்கதிர் – சுணங்கு அணிந்த முலைமுற்றம். முலைமுற்றத்தில் உள்ள முத்தாரம் போல் நிலவொளி. குளிர்ந்த மலைச்சோலையில் அருவி இறங்குவது போல முத்தார நிலவொளி கொண்ட முலைமுற்றம்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  குறிஞ்சி

பாம்புடை விடர பனி நீர் இட்டுத் துறைத்
தேம் கலந்து ஒழுக, யாறு நிறைந்தனவே;
வெண் கோட்டு யானை பொருத புண் கூர்ந்து,
பைங் கண் வல்லியம் கல் அளைச் செறிய,
முருக்கு அரும்பு அன்ன வள் உகிர் வயப் பிணவு  5
கடி கொள, வழங்கார் ஆறே; ஆயிடை
எல்லிற்று என்னான், வென் வேல் ஏந்தி,
நசை தர வந்த நன்னராளன்
நெஞ்சு பழுதாக, வறுவியன் பெயரின்,
இன்று இப்பொழுதும் யான் வாழலெனே;       10
எவன்கொல்? வாழி, தோழி! நம் இடை முலைச்
சுணங்கு அணி முற்றத்து ஆரம் போலவும்,
சிலம்பு நீடு சோலைச் சிதர் தூங்கு நளிப்பின்
இலங்கு வெள் அருவி போலவும்,
நிலம் கொண்டனவால், திங்கள் அம் கதிரே!    15

இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.
வெள்ளிவீதியார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்


No comments:

Post a Comment