Pages

Tuesday, 25 October 2016

அகநானூறு Agananuru 360

இரவில் வந்து தலைவியைத் துய்க்குமாறு தலைவனுக்குத் தோழி குறியிடம் காட்டுகிறாள்.


பல வகையான மலர்கள் பூத்துக்கிடக்கும் பொழிலில் பகலெல்லாம் இவளோடு இருந்து பொழுதைப் போக்குகிறாய். ஒற்றைச் சக்கரம் கொண்ட பருதி (சூரியன்) மேற்கு மலையில் மறையும்போது திரும்பிவிடுகிறாய். வளைந்த கடற்கழிச் சேற்றில் பூத்திருக்கும் நெய்தல் மலரில் அந்தி வேளையில் தேன் உண்ட வண்டு ஓடிவிடுவது போலச் சென்றுவிடுகிறாய். 

அச்சம் தரும் இரு பெருந் தெய்வங்களின் (ஒளியாகிய சிவனும், இருளாகிய திருமாலும் இணைந்து அம்மையப்பராகக் காட்சி தரும் தெய்வம்) உருவம் ஒன்றாக இணைந்திருக்கும் தோற்றம் போல பகலும் இரவும் ஒன்றிணைந்து காணப்படும் அந்தி வானம் இது. 

கடலில் இந்த அழகிய தோற்றம் வரும்போது சென்றுவிடுகிறாய். 
இப்படி செல்லும்போது, இவள் தனிமை எய்திப் புலம்புகிறாள். 

அதனால் உன் தேர்க்குதிரை யாமத்தில் தெவிட்டாமல் (இழுத்துச் சோர்ந்து ஒலி எழுப்பாமல்) இருக்கும்படி தேரைத் தனியே நிறுத்து. குன்றிலிருந்த வந்த யானை போல் குவிந்து கிடக்கும் மணல் மேடுகளைக் கடந்து இரவு வேளையில் வருக.

நீ வலிமை மிக்க கடல் நீர் சேர்ந்திருக்கும் சேர்ப்பு நிலத்தின் தலைவன்.
சேர்ப்ப, இரவில் வருக.

அதோ பார் பனைமரம். மீன் உண்ணும் நாரையும், அன்றிலும் தங்கி வாழும் பனைமரம். அந்தப் பனைமரம் இருக்கும் முற்றம் கொண்டது நாங்கள் வாழும் இல்லம். அங்குள்ள மலர்ச்சோலையில் புன்னை மலர்கள் கொட்டிக்கிடக்கும். அங்கு நீ வருக. இவளைப் பெறுக.
  • தெய்ய – இடைச்சொல், அசைநிலை
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  நெய்தல்

பல் பூந் தண் பொழில், பகல் உடன் கழிப்பி,
ஒரு கால் ஊர்திப் பருதி அம் செல்வன்
குடவயின் மா மலை மறைய, கொடுங் கழித்
தண் சேற்று அடைஇய கணைக் கால் நெய்தல்
நுண் தாது உண்டு வண்டினம் துறப்ப, 5
வெருவரு கடுந் திறல் இரு பெருந் தெய்வத்து
உரு உடன் இயைந்த தோற்றம் போல,
அந்தி வானமொடு கடல் அணி கொளாஅ,
வந்த மாலை பெயரின், மற்று இவள்
பெரும் புலம்பினளே தெய்ய; அதனால்,          10
பாணி பிழையா மாண் வினைக் கலி மா
துஞ்சு ஊர் யாமத்துத் தெவிட்டல் ஓம்பி,
நெடுந் தேர் அகல நீக்கி, பையெனக்
குன்று இழி களிற்றின் குவவு மணல் நீந்தி,
இரவின் வம்மோ உரவு நீர்ச் சேர்ப்ப!    15
இன மீன் அருந்து நாரையொடு பனைமிசை
அன்றில் சேக்கும் முன்றில், பொன் என
நல் மலர் நறு வீ தாஅம்
புன்னை நறும் பொழில் செய்த நம் குறியே.

பகற்குறி வந்த தலைமகற்குத் தோழி பகற்குறி மறுத்து, இரவுக்குறி நேர்ந்தது.
மதுரைக் கண்ணத்தனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்





No comments:

Post a Comment