Pages

Tuesday, 25 October 2016

அகநானூறு Agananuru 359

ஏக்கத்தை மூடி மறைக்கும் உன்னை உன் காதலர் எண்ணிப் பார்க்கவில்லையே!

1
இகுளை (தோழியே), மை உண்ட உன் கண் பனியைப் பொழிகிறது. தோள் பசந்து காணப்படுகிறது. இவை உன் நிலைமையைப் பலரும் அறியும்படிக் காட்டுகின்றன. அதனை நீ மறைக்க முயல்கிறாய். உனது இந்த உயர்ந்த பண்புகளை உன் காதலர் தெரிந்துகொள்ளவில்லை. சென்ற இடத்தில் காலம் நீட்டித்துக்கொண்டிருக்கிறார். இவ்வாறு எண்ணிக்கொண்டு செய்வதறியாமல் நீ கலங்குகிறாய்.
2
வானவரம்பன் ஊர் வெளியம் போன்று நீ அழகு மிக்கவள். அந்த உன் ஆழகையெல்லாம் அவர் தன்னுடன் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.
3
யாழிசைக் கலைஞர் கோடியர், வெளியூர் செல்லும் வழியில் பாறைமீது அமர்ந்துகொண்டு தம் இசைக் கருவிகளை முழக்குவர். அதுபோல, தன் ஆசை வலையில் வீழ்ந்த பெண்யானையைக் கெடுத்த ஆண்யானை சூர்ப் பேய்கள் நடமாடும் மலையடுக்கத்தில் முழங்கும் இடியோடு எதிர்முழக்கம் செய்யும். இப்படி முழங்கும் மலையடுக்கம் கொண்டது புல்லி அரசன் நாடு. 

புல்லி அரசன் தன் கொடையால் புகழ் பெற்றவன். அவன் முதை சுவலில் (மரங்களை வெட்டி வீழ்த்திச் சுட்டு உருவாக்கிய மலை-வயலில்) கவையாகப் பிரிந்து விளைந்திருக்கும் வரகினை மூடிக்கொண்டு மலைவயல் புனம் சுடும் புகையும், அருவியின் நீர்த்திவலையும் கலந்து மேகம் போல் மூடிக் கிடக்கும். அந்த மலை வழியாக அவர் சென்றுள்ளார். அவர் உன் நிலைமையை எண்ணிப் பார்க்கவில்லை.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  பாலை

1
''பனி வார் உண்கணும், பசந்த தோளும்,
நனி பிறர் அறியச் சாஅய், நாளும்,
கரந்தனம் உறையும் நம் பண்பு அறியார்,
நீடினர் மன்னோ, காதலர்'' என நீ
எவன் கையற்றனை? இகுளை! அவரே    5
2
வானவரம்பன் வெளியத்து அன்ன நம்
மாண் நலம் தம்மொடு கொண்டனர் முனாஅது,
3
அருஞ் சுரக் கவலை அசைஇய கோடியர்,
பெருங் கல் மீமிசை, இயம் எழுந்தாங்கு,
வீழ் பிடி கெடுத்த நெடுந் தாள் யானை     10
சூர் புகல் அடுக்கத்து மழை மாறு முழங்கும்,
பொய்யா நல் இசை மா வண் புல்லி,
கவைக் கதிர் வரகின் யாணர்ப் பைந் தாள்
முதைத் சுவல் மூழ்கிய, கான் சுடு குரூஉப் புகை
அருவித் துவலையொடு மயங்கும்       15
பெரு வரை அத்தம் இயங்கியோரே!

பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.
மாமூலனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்


No comments:

Post a Comment