Pages

Tuesday, 25 October 2016

அகநானூறு Agananuru 357

அவர் எங்குச் சென்றால் என்ன? 
உன் காதல் கண்களை அவரால் மறக்க முடியுமா?

1
வளைந்த முள் கொண்ட ஈங்கை, சூரல் ஆகிய புதர்களில் வெண்ணிறப் பூக்கள் மண்டிக்கிடக்கும் காட்டில் உணவு இல்லாமல் வருந்தும் பெண்புலியின் பசியைப் போக்குவதற்காக, ஆண்புலி வலிமை மிக்க கொம்பினை உடைய யானையை வலப்பக்கமாகச் சாயும்படிக் கொன்று, பாறை இரத்தத்தால் சிவக்கும்படி இழுத்து, உடம்பை நீட்டி மடக்கி விழுந்து புரண்ட சிறு பாதையில் அவர் செல்லாமல், யானைகள் கை கோத்துக்கொண்டு செல்லும் பலாமர உம்பல் காட்டைக் (ஆனைமலை) கடந்தது அவர் சென்றுள்ளார்.
2
ஆயினும், உன் பருத்த தோள் அரவணைப்பு இல்லாமல் வருந்தும்படி, உன்னை நினைக்காமல் காலம் கடத்த மாட்டார். விரைந்து வந்து உன்னைக் காதல் மழையில் நனையச் செய்வ்வார். பெருமழையால் நீர் நிறைந்து, இலைகளுக்கு மேலே பூத்து காற்றில் அசையும் நீலமலர் போன்ற உன் காதல் கண்களை அவரால் மறக்க முடியுமா?

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  பாலை

1
கொடு முள் ஈங்கை சூரலொடு மிடைந்த
வான் முகை இறும்பின் வயவொடு வதிந்த
உண்ணாப் பிணவின் உயக்கம் தீரிய,
தட மருப்பு யானை வலம் படத் தொலைச்சி,
வியல் அறை சிவப்ப வாங்கி, முணங்கு நிமிர்ந்து, 5
புலவுப் புலி புரண்ட புல் சாய் சிறு நெறி
பயில் இருங் கானத்து வழங்கல்செல்லாது,
பெருங் களிற்று இன நிரை கை தொடூஉப் பெயரும்,
தீம் சுளைப் பலவின் தொழுதி, உம்பற்
பெருங் காடு இறந்தனர் ஆயினும், யாழ நின்    10
2
திருந்து இழைப் பணைத் தோள் வருந்த நீடி,
உள்ளாது அமைதலோ இலரே; நல்குவர்
மிகு பெயல் நிலைஇய தீம் நீர்ப் பொய்கை
அடை இறந்து அவிழ்ந்த தண் கமழ் நீலம்
காலொடு துயல்வந்தன்ன, நின்     15
ஆய் இதழ் மழைக் கண் அமர்த்த நோக்கே.

பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது.
எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்


No comments:

Post a Comment