தாவாயில் கையை ஊன்றிக்கொண்டு படுத்திருக்கும் என்னவளுக்கு நான் திரும்பி அவளிடம் வருவது தெரியுமோ, தெரியாதோ? என்று தலைவன் நினைக்கிறான்.
1
வேற்று நாட்டில் விருப்பத்துடன் தங்கியிருந்தேன். இங்கு என் உறவினர் ஆனவர்கள் என் பின்னே வந்து என்னை வழியனுப்பி வைக்கின்றனர். வேண்டிய அளவு பொருளைச் சேர்த்துக்கொண்டேன். என் குறை தீர்ந்து நிறைவு கொண்டுள்ளேன். இப்போது என் ஊருக்குத் திரும்பிச் செல்கிறேன். இதனை என் மனைவி அறிவாளோ, அறியமாட்டாளோ, எனக்குத் தெரியவில்லை.
2
நான் என்னவளை விட்டு ஊரில் பிரியும்போது, வெயிலின் காய்ச்சலாலால் இரும்பை மரங்களில் இலைகள் உதிர்ந்திருந்தன. மரச்சோலையில் கூட அனல் பறந்தது. அந்தக் காட்டு வழியில் நான் திரும்பி வருவேன் என்று எண்ணிக்கொண்டு அவள் வந்து பார்ப்பாள். நான் அவளை விட்டுவிட்டு வந்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டன என்று சுவரில் அவள் போட்ட வட்டங்களை ஒவ்வொன்றாகக் கூட்டி எண்ணிப் பார்த்து அழுதுகொண்டிருப்பாள். அவளது கண்ணீர் அவளது மார்பில் உள்ள பொன்னணிகளில் விழுந்து தெறித்துக்கொண்டிருக்கும். கைகளைத் தாவாயில் ஊன்றிக்கொண்டு பஞ்சணையில் கிடப்பாள். அவளது தோள் வாட்ட நோய் நீங்கும் என்பது போல் பல்லி படும் ஓசை அவளது காதுகளில் விழும்.
அவளுக்கு நான் வருவது தெரியுமோ, தெரியாதோ?
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை பாலை
1
வேற்று நாட்டு உறையுள்
விருப்புறப் பேணி,
பெறல் அருங் கேளிர்
பின் வந்து விடுப்ப,
பொருள் அகப்படுத்த புகல்
மலி நெஞ்சமொடு
குறை வினை முடித்த
நிறைவு இன் இயக்கம்
அறிவுறூஉம் கொல்லோ தானே கதிர் தெற, 5
2
கழல் இலை உகுத்த
கால் பொரு தாழ் சினை,
அழல் அகைந்தன்ன அம்
குழைப் பொதும்பில்,
புழல் வீ இருப்பைப்
புன் காட்டு அத்தம்,
மறுதரல் உள்ளமொடு குறுக,
தோற்றிய
செய் குறி ஆழி
வைகல்தோறு எண்ணி, 10
எழுது சுவர் நினைந்த
அழுது வார் மழைக் கண்
விலங்கு வீழ் அரிப்
பனி பொலங் குழைத் தெறிப்ப,
திருந்து இழை முன்கை அணல் அசைத்து
ஊன்றி,
இருந்து அணை மீது,
பொருந்துழிக் கிடக்கை,
வருந்து தோள் பூசல்
களையும் மருந்து என 15
உள்ளுதொறு படூஉம் பல்லி,
புள்ளுத் தொழுது உறைவி செவிமுதலானே?
பொருள் முற்றி மறுத்தராநின்ற
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
பொருந்தில் இளங்கீரனார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்

No comments:
Post a Comment