Pages

Friday, 21 October 2016

அகநானூறு Agananuru 350

தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

1
கடலின் கழிமுகத்தில் நெய்தல், காவி ஆகிய பூக்கள் கூம்பும்டி நீரலை மோதிக்கொண்டே இருக்கிறது. அதனால் பிரிந்த கொம்பு போன்ற கைகளை உடைய நண்டு நீர்த்துறைச் சேற்றில் காணப்படவில்லை. ஆள் நடமாட்டமும் இங்கு இல்லை. எங்கும் அமைதி. (பாடு ஆன்ற நிலை)
2
என் தலைவிமீது காதல் கொண்டுள்ள தலைவனே!

மணி கட்டிய உன் தேரை இழுக்க வளைந்த நுகத்தில் உன் அத்திரிக் குதிரைகளைப் பூட்டாதே. காதல் ஈரக் கண் கொண்ட இவள் (என் தலைவி) குறையைப் போக்குவதற்காக எம் ஊரில் தங்கிச் செல்.
3
எங்களது பரதவர் கடலில் சுறா மீனுக்காகச் செல்லவில்லை. கடலில் மூழ்கி, வலம்புரிச் சங்கம் எடுக்கின்றனர். திமிலில் கடலுக்குள் சென்று மூழ்கி வலம்புரிச் சங்கம் எடுக்கின்றனர். சங்கு ஊதும் ஒலியுடன் முழ்கி வலம்புரிச் சங்கம் எடுக்கின்றனர். கொற்கையில் வலம்புரிச் சங்கம் எடுக்கின்றனர். அந்தக் கொற்கையில் மணல் குவிந்த கரையில், அதோ பார், எங்கள் சிற்றூர் தெரிகிறது. அங்கு இவளுடன் தங்கிச் செல்லலாம்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  நெய்தல்

1
கழியே, சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப,
எறி திரை ஓதம் தரல் ஆனாதே;
துறையே, மருங்கின் போகிய மாக் கவை மருப்பின்
இருஞ் சேற்று ஈர் அளை அலவன் நீப்ப,
வழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்றே; 5
2
கொடு நுகம் நுழைந்த கணைக் கால் அத்திரி
வடி மணி நெடுந் தேர் பூண ஏவாது,
ஏந்து எழில் மழைக் கண் இவள் குறையாகச்
சேந்தனை சென்மோ பெரு நீர்ச் சேர்ப்ப!
3
இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி,             10
வலம்புரி மூழ்கிய வான் திமிற் பரதவர்
ஒலி தலைப் பணிலம் ஆர்ப்ப, கல்லென,
கலி கெழு கொற்கை எதிர்கொள, இழிதரும்
குவவு மணல் நெடுங் கோட்டு ஆங்கண்,
உவக்காண் தோன்றும், எம் சிறு நல் ஊரே!   15

பகற்குறி வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லியது.
சேந்தன் கண்ணனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்


No comments:

Post a Comment