Pages

Friday 21 October 2016

அகநானூறு Agananuru 348

நாடனின் நிலையில்லாத பேச்சை நம்பிய என் நெஞ்சு என்ன ஆவது? தலைவி தோழியை வினவுகிறாள்.


தேன் போல் சுவைக்கும் மாம்பழம், 
பலாச்சுளை, 
இறால்-மீன் 

மூன்றையும் கூழாக்கி 
மூங்கில் குழாயில் அடைத்துப் 
பாம்பு கடித்தது போலக் கடுப்பு ஏறும்படி வைத்திருந்த “தோப்பி” என்னும் கள்ளைப் பருகிய மகளிர் 
தினைப்புனத்தைச் சரியாகக் காக்காததால் “யானை தினையை மேய்ந்துவிட்டது” என்று 
ஊரிலுள்ள இளைஞர்களும் முதியவர்களும் 
கையில் வில்லை வைத்துக்கொண்டு யானை ஓட்டத் திரியும் மலைநாட்டை உடையவன் அவன். 
அவன் பேச்சை நம்பிய என் நெஞ்சு என்ன ஆவது?
  • மா – கோடை காலத்தில் பழுத்துத் தானே விழுந்த பழம்
  • பலாச் சுளை – தொலைதூரம் மணம் பரப்புவது, இனியது
  • அரியல் – மா, பலா, இறால் மூன்றையும் அரைத்து வடிகட்டியது
  • தோப்பி – வண்டு மொய்க்கும்படி ஊறிய அரியல். நீண்ட கணுக் கொண்ட மூங்கில் குழாயில் அடைத்து ஊறும்படி (பழுநி) வைக்கப்பட்டது. நஞ்சுள்ள பாம்புக்கடி போல கடுப்பு (மயக்கும்) ஏறும்படி வைக்கப்பட்டது
  • தினைப்புனம் – கடந்து செல்ல முடியாத அளவுக்கு (கடவுள்) ஓங்கிய மலையில் இருந்தது. மகளிர் தழையாடை உடுத்திக்கொண்டு இதனைக் காவல் புரிந்தனர். தோப்பிக் கள்ளைப் பருகிய மயக்கத்தில் காவல் புரிந்தனர். காவல் சரியில்லாததால் யானை தினைப்புனத்தில் மேய்ந்துவிட்டது.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  குறிஞ்சி

என் ஆவதுகொல் தானே முன்றில்,
தேன் தேர் சுவைய, திரள் அரை, மாஅத்து,
கோடைக்கு ஊழ்த்த, கமழ் நறுந் தீம் கனி,
பயிர்ப்புறப் பலவின் எதிர்ச் சுளை அளைஇ,
இறாலொடு கலந்த, வண்டு மூசு, அரியல்  5
நெடுங் கண் ஆடு அமைப் பழுநி, கடுந் திறல்
பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி வான் கோட்டுக்
கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கி, குறவர்,
முறித் தழை மகளிர் மடுப்ப, மாந்தி,
அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்துழி,           10
''யானை வவ்வின தினை'' என, நோனாது,
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ,
சிலை ஆய்ந்து திரிதரும் நாடன்
நிலையா நல் மொழி தேறிய நெஞ்சே?

தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லெடுப்ப, தலைமகள் சொல்லியது.
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்


No comments:

Post a Comment