Pages

Thursday, 20 October 2016

அகநானூறு Agananuru 346

நினைத்தாலே சிரிப்பு வருகிறது. 

சோழன் பாண்டியனின் மதுரையைக் கைப்பற்றியபோது சேரன் மகிழ்ந்தது போன்று சிரிப்பு வருகிறது. 

பரத்தையிடமிருந்து மீண்ட தலைவனிடம் தோழி இவ்வாறு கூறுகிறாள்.
1
உன்னைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. நீ ஊரன். கொக்கு மீனுக்காகக் கலிங்கில் அமர்ந்திருக்கும் ஊரை உடையவன்.
  • கொக்கின் சேவல் – மாரிக்காலத்தில் ஈரம் பட்டிருக்கும் சுண்ணாம்புச் சுவர் போன்ற சிறகினைக் கொண்ட கொக்கு
  • கயல் – வெள்ளி போல் தோன்றும் கயல்
  • கொடுஞ்சிறை – ஆற்று நீரைத் தேக்கி உயர்த்தி வயல்களுக்குப் பாய்ச்சும் கலிங்கு. கள் உண்ட மகிழ்ச்சியில் உழவர் கட்டிய கலிங்கு. காஞ்சி மரக் கிளைத் துண்டுகளை ஆற்று மண்ணில் குத்தி, கரும்பைப் படுக்கைவாட்டில் அடுக்கிக் கட்டி, நெல்லில் இடித்த அவலை மண்ணில் குழைத்து அடைத்துக் கட்டிய கலிங்கு
2
நீ அவள் (பரத்தை) வீட்டில் இருந்ததை என் தலைவி பொருட்படுத்தவில்லை. நீ பண்ணிசை பாடும் உன் பாணனோடு அவள் வீட்டுக்குச் சென்றாய். முரசு முழக்கத்துடன் மது அருந்தினாய். சுற்றத்தாருடன் சேர்ந்து மது அருந்தினாய். உன் மனைவி இருக்கும் இந்த வீட்டுக்குத் திரும்பவில்லை. முதல் நாள் நீ அவள் வீட்டுக்குத் தேரில் சென்றபோது, அவள் மகிழ்ந்தாள். அவள் தன் வளையல் குலுங்க உன்னை வரவேற்ற மடந்தை.
3
சோழ அரசன் கிள்ளி வளவன் படையுடன் வேற்று நாட்டுக்கு வந்து பாண்டிய அரசன் பழையன் மாறனைத் தாக்கிப் பாண்டியனின் கூடல் நகரையும், அவனது குதிரை, யானை முதலானவற்றையும் கைப்பற்றியபோது, சேர அரசன் கோதை மார்பன் மகிழ்ந்து சிரித்தது போலச் சிரிப்பு வருகிறது.
  • பழையன் மாறன் – பாண்டிய அரசன். அணிகலன் பூண்ட பட்டத்து யானை கொண்டவன்.
  • கூடல் – மதுரை, இந்த மாறனின் தலைநகர். மாட மாளிகைகள் நிறைந்த ஊர்.
  • கிள்ளிவளவன் – வெள்ளம் போன்ற படையுடன் வேற்று நாட்டுக்கு வந்தவன். போரில் மாறனை வீழ்த்தியவன். மாறனின் குதிரை, யானை முதலானவற்றைக் கூடல் நகரோடு கைப்பற்றிக்கொண்டவன்.
  • கோதைமார்பன் – சேர மன்னன்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  மருதம்

1
நகை நன்று அம்ம தானே இறை மிசை
மாரிச் சுதையின் ஈர்ம் புறத்து அன்ன
கூரல் கொக்கின் குறும் பறைச் சேவல்,
வெள்ளி வெண் தோடு அன்ன, கயல் குறித்து,
கள் ஆர் உவகைக் கலி மகிழ் உழவர் 5
காஞ்சி அம் குறுந் தறி குத்தி, தீம் சுவை
மென் கழைக் கரும்பின் நன் பல மிடைந்து,
பெருஞ் செய் நெல்லின் பாசு அவல் பொத்தி,
வருத்திக் கொண்ட வல் வாய்க் கொடுஞ் சிறை
மீது அழி கடு நீர் நோக்கி, பைப்பயப்        10
பார்வல் இருக்கும் பயம் கேழ் ஊர!
2
யாம் அது பேணின்றோ இலமே நீ நின்
பண் அமை நல் யாழ்ப் பாணனொடு, விசி பிணி,
மண் ஆர், முழவின் கண் அதிர்ந்து இயம்ப,
மகிழ் துணைச் சுற்றமொடு மட்டு மாந்தி,       15
எம் மனை வாராயாகி, முன் நாள்,
நும் மனைச் சேர்ந்த ஞான்றை, அம் மனைக்
குறுந் தொடி மடந்தை உவந்தனள் நெடுந் தேர்,
3
இழை அணி யானைப் பழையன் மாறன்,
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண்,    20
வெள்ளத் தானையொடு வேறு புலத்து இறுத்த
கிள்ளி வளவன் நல் அமர் சாஅய்,
கடும் பரிப் புரவியொடு களிறு பல வவ்வி,
ஏதில் மன்னர் ஊர் கொள,
கோதை மார்பன் உவகையின் பெரிதே.            25

தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது.
நக்கீரர் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்


2 comments: