Pages

Wednesday, 19 October 2016

அகநானூறு Agananuru 343

மீண்டும் பொருளீட்டச் செல்லும் தலைவன் தன் நெஞ்சோடு பேசுகிறான்.

  • என் நெஞ்சே!
  • வளைந்த மூங்கில் போல் பருத்த தோள், சுருங்குமுனையில் பூண் அணிந்த முலை, அழகிய மார்பகம் ஆகியவற்றைக் கொண்ட பேதைப் பெண்ணைத் தழுவ விரும்புகிறாய். அதற்காக் பொருள் ஈட்ட வந்துள்ளாய்.
  • மரவண்டியில் உப்புடன் உமண்மகன் செல்லும் வழியில் வந்துள்ளாய்.
  • பகைவரைக் கொன்றவனின் நடுகல் இருக்கும் வழியில் வந்துள்ளாய்.
  • மாலை வாடிக்கிடக்கும் நீராடாத உடம்போடு வந்துள்ளாய்.
  • கூர் உளி கொண்டு மரத்தில் பொறிக்கப்பட்ட எழுத்து அழிந்திருக்கும் நிலையில் வழிப்போக்கர்களை வேறு வழியில் திருப்பிவிடும் பிரிவுப் பாதையில் வந்துள்ளாய்.
  • கண்ணில் பொரி பரக்கும் காட்டுக்கு வந்துள்ளாய்.
  • திசையெல்லாம் யா மரம் தளிர் விட்டிருக்கும் வழியில் வந்துள்ளாய்.
  • இல்ல மரம் போல் நிழல் இருக்கும் இடத்தில் வெயிலுக்காக ஒதுங்குகிறாய்.
  • நீண்ட காதும், குறுகிய கால்களும் கொண்ட கழுதைமேல் பண்டங்களை ஏற்றிக்கொண்டு வருபவர்களுக்கு, பண்டங்களை இறக்கி வைத்து இளைப்பாற உதவுகிறாய்.  
  • படைக்கருவி இல்லாமல் வருபவர்களுக்கு உதவுகிறாய்.
  • ஒப்புயர்வற்ற பெரு முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டுள்ளாய்.
என் நெஞ்சே!
  • முன்பு இவ்வாறு செயல்பட்டு வெற்றி கண்டது போல மீண்டும் செயலாற்ற விரும்புகிறாய்.
கள்ளைப் போலவும், தேன் போலவும், மகிழ்விக்கும் மழைக்கண், சில மொழிகள் மட்டுமே பேசும் செவ்வாய் ஆகியவற்றை உடைய பேதைப் பெண்ணைப் பிரிந்து வந்துள்ளாய்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  பாலை

வாங்கு அமை புரையும் வீங்கு இறைப் பணைத் தோள்,
சில் சுணங்கு அணிந்த, பல் பூண், மென் முலை,
நல் எழில், ஆகம் புல்லுதல் நயந்து,
மரம் கோள் உமண் மகன் பேரும் பருதிப்
புன் தலை சிதைத்த வன் தலை நடுகல்    5
கண்ணி வாடிய மண்ணா மருங்குல்,
கூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து, அவ்
ஆறு செல் வம்பலர் வேறு பயம் படுக்கும்
கண் பொரி கவலைய கானத்து ஆங்கண்,
நனந்தலை யாஅத்து அம் தளிர்ப் பெருஞ் சினை,    10
இல் போல் நீழல் செல் வெயில் ஒழிமார்,
நெடுஞ் செவிக் கழுதைக் குறுங் கால் ஏற்றைப்
புறம் நிறை பண்டத்துப் பொறை அசாஅக் களைந்த
பெயர் படை கொள்ளார்க்கு உயவுத் துணை ஆகி,
உயர்ந்த ஆள்வினை புரிந்தோய்; பெயர்ந்து நின்று 15
உள்ளினை வாழி, என் நெஞ்சே! கள்ளின்
மகிழின் மகிழ்ந்த அரி மதர் மழைக் கண்,
சில் மொழிப் பொலிந்த துவர் வாய்,
பல் மாண் பேதையின் பிரிந்த நீயே.

தலைமகன் இடைச் சுரத்து மீளக் கருதிய நெஞ்சினைக் கழறிப் போயது.
மதுரை மருதன் இளநாகனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்


No comments:

Post a Comment