பொருளீட்ட மீண்டும் செல்ல நினைக்கும் தலைவனின் மன-அலைகள்.
1
மலைச்சாரலில் உள்ள யா மரத்தின் உயர்ந்த கொம்பில் கொழுந்து விட்டுத் தழைத்திருக்கும் மழைக்கால இளந்தளிர் போன்ற மேனியும், ஆசை மிகுந்த கண்ணும் உடையவள் தனித்துப் புலம்பும்படி விட்டுவிட்டுப் பிரிந்து வந்து இங்கு வாழ்தல் இனிதாக இல்லை என்னும் நினைவு ஒருபுறம் வருத்துகிறது.
2
ஆயினும் பொருள் அங்கேதானே இருக்கிறது என்னும் நினைவு ஒருபுறம் அங்கே ஈர்க்கிறது. முன்பு நான் பொருளீட்டிவரச் சென்றேன். அப்போது உப்பு விற்கச் செல்லும் உமணர்களின் எருதுகள் போல ஆங்காங்கே சிறுசிறு பாறைகள் இருக்கும் வழியில் மடியில் ஓலைச்சுருளைக் கட்டிக்கொண்டு தூது சொல்லும் பார்ப்பான் சென்றான். கொல்லும் படைக்கருவிகளுடன் திரியும் வழிப்பறிக் கொள்ளையர், ‘உண்ணாமல் ஒட்டிய வயிற்றுடன் காணப்படும் இவன் கையில் பொருள் இருக்கும்’ என்று எண்ணி வீணாக அவனை வெட்டிக் கொன்றனர். கொடுமையான கண் கொண்ட அந்த மழவர்கள் அவன் மடித்துணியைக் கிழித்துப் பார்த்தபோது பொருள் ஏதும் இல்லை. எனவே கை விரல்களில் நெட்டி முரித்துப் போட்டுவிட்டுத் தம் தடிகளையும், அம்புகளையும் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர். மரல்நீரை நீர் என நம்பி அலைந்த குள்ளநரி இறந்த பார்ப்பானின் இரத்தத்தைக் குடித்தது. வெள்ளை நிறப் பரல் கற்கள் வெயிலில் கண்ணைப் பறிக்கும் பிரிவுப்பாதை அது. அப்போது நான் கள்ளி நிழலில் கதறிக்கொண்டு தங்கியிருந்தேன். மழையே இல்லாமல் சூடு பறக்கும் காடு அது. அந்தக் காட்டு வழியில், நெஞ்சமே, என்னைத் தனியே போகும்படிச் செய்தாயே! மழை பொழியும் நள்ளிரவில் வாடைக்காற்று வீச்ம்போது என் காதலி தனியே வருந்துவாளே, என்று எண்ணிப் பார்த்தாயா?
- வெள்ளோலை – எழுத்துக்கள் தெரிய மஞ்சள் தடவப்பெறாத வெள்ளைநிற எழுத்தோலை
- மழவர் கையில் செங்கோல் – செங்கோல் = தண்டிக்கும் தண்டக்கோல்
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை
1
''சாரல் யாஅத்து உயர்
சினை குழைத்த
மாரி ஈர்ந் தளிர்
அன்ன மேனி,
பேர் அமர் மழைக்
கண், புலம்பு கொண்டு ஒழிய,
ஈங்குப் பிரிந்து உறைதல்
இனிது அன்று; ஆகலின்
2
அவணது ஆக, பொருள்''
என்று, உமணர் 5
கண நிரை அன்ன,
பல் கால், குறும்பொறை,
தூது ஒய் பார்ப்பான்
மடி வெள் ஓலைப்
படையுடைக் கையர் வரு தொடர்
நோக்கி,
''உண்ணா மருங்குல் இன்னோன்
கையது
பொன் ஆகுதலும் உண்டு''
என, கொன்னே 10
தடிந்து உடன் வீழ்த்த
கடுங்கண் மழவர்,
திறன் இல் சிதாஅர்
வறுமை நோக்கி,
செங் கோல் அம்பினர்
கைந் நொடியாப் பெயர,
கொடி விடு குருதித்
தூங்கு குடர் கறீஇ,
வரி மரல் இயவின்
ஒரு நரி ஏற்றை, 15
வெண் பரல் இமைக்கும்
கண் பறி கவலை,
கள்ளி நீழல் கதறுபு
வதிய,
மழை கண்மாறிய வெங்
காட்டு ஆர் இடை,
எமியம் கழிதந்தோயே பனி
இருள்
பெருங் கலி வானம்
தலைஇய 20
இருங் குளிர் வாடையொடு
வருந்துவள் எனவே!
முன்னொரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்து வந்த தலைமகன் பின்னும்
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.
பாலை பாடிய பெருங்கடுங்கோ
பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்
No comments:
Post a Comment