Pages

Saturday, 15 October 2016

அகநானூறு Agananuru 336

நயப்புப்பரத்தை 
ஊர்ப்பரத்தையின் தோழியர் 
கேட்கும்படிப் பேசுகிறாள்.

1
குழல் போல் உள்ளே துளை உள்ள காம்பையும், அகன்ற மடல் போன்ற இலைகளையும் கொண்ட சேம்புச் செடிக்கு அடியில் பாசி படிந்த நீரில் உணவு இல்லாமல் பசியோடு இருக்கும் தன் பெண்நாய்க்கு அன்றாட உணவைத் தர விரும்பி, ஆண்நீர்நாய் வாளைமீனோடு போரிடுகையில் நீர்த்துறையே கலங்கிக் கிடக்கும்.
2
அந்தத் துறையின் கரையில் உள்ள காஞ்சிமர நிழலில் குடிநீர் மொண்டுகொண்டு வந்த மகளிர் நீர்க்குடத்தை இறக்கி வைத்துவிட்டு, பாடிக்கொண்டு குரவை ஆடுவர். அந்த ஊரின் தலைவன், மகளிரோடு மகிழ்ந்து திளைக்கும் மகிழ்நன் செய்யும் பரத்தைமைச் செய்கையைப் பாடிக்கொண்டு குரவை ஆடுவர். தெளிந்த கள்ளை உண்ட மகளிர் அவர்கள். அப்படிக் குரவை ஆடும் துறையை உடையவன் தலைவனாகிய ஊரன்.
3
அந்த ஊருக்குச் சில பரத்தையர் தேரில் ஏறிக்கொண்டு வந்தனர்.

அவர்கள் ஊர்மக்கள் அனைவர்க்கும் உரிய புத்தூர்ப்பரத்தையர். தலைமகனுக்கு மட்டுமே உரிமை பூண்டு வாழும் பரத்தை நயப்புப்பரத்தை. கோவலனுக்கு மட்டுமே உரிமை பூண்டு வாழ்ந்த மாதவி போன்று வாழ்ந்த நயப்புப்பரத்தை. நயப்புப்பரத்தை சொல்கிறாள். 

அவர்கள் என்னைப் போன்ற நயப்புப்பரத்தையின் அழகை ஏளனமாக ஏசிப் பேசுகின்றனராம். யானை பாகன் சொன்னபடியெல்லாம் கேட்டு நடந்துகொள்ளும். அது யானையானது தன் பாகனுக்குத் தரும் கொடை. யானை கீழ்ப்படியாவிட்டால் பாகன் நிலை என்ன ஆகும்? ஊரன் நயந்த பரத்தையாகிய நான் ஊர்ப்பரத்தையரிடம் யானைபோல் நடந்துகொள்கிறேன். இதனை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
4
ஊருக்கு வந்த பரத்தையரும், பிறரும் ஒன்று கூடி முழவு முழக்கத்துடன் துணங்கை விழாவில் ஆடுகின்றர். அங்கு நான் செல்லவில்லை. சென்றால் சூரியனையே பார்த்துக்கொண்டிருக்கும் நெருஞ்சிப் பூ போல அவன் என்னையே பார்த்துக்கொண்டிருப்பான். அங்குச் சென்று ஊரனை என்னையே பார்த்துக்கொண்டிருக்கும்படிச் செய்யாவிட்டால்,
5
வல்லம் என்னும் ஊரின் வெளிப்புறக் காவல்-காட்டில், தோல் கேடயம் அணிந்துகொண்டு மழையின் நீர்த்தாரை விழுவது போல அம்பைச் சொரியும் சோழர் படையை எதிர்த்துப் போரிட்ட ஆரியர் படை உடைந்து பின்வாங்கி ஓடியது போல ஓடச்செய்வேன். அப்படி அவர்களை ஓடச் செய்யாவிட்டால், என் கையின் மணிக்கட்டில் உள்ள வளையல்கள் உடைந்து விழட்டும். – நயப்புப் பரத்தை இப்படிப் பேசுகிறாள்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை,  மருதம்

1
குழற் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலைப்
பாசிப் பரப்பில் பறழொடு வதிந்த
உண்ணாப் பிணவின் உயக்கம் சொலிய,
நாள் இரை தரீஇய எழுந்த நீர் நாய்
வாளையொடு உழப்ப, துறை கலுழ்ந்தமையின்,     5
2
தெண் கட் தேறல் மாந்தி, மகளிர்
நுண் செயல் அம் குடம் இரீஇ, பண்பின்
மகிழ்நன் பரத்தைமை பாடி, அவிழ் இணர்க்
காஞ்சி நீழல் குரவை அயரும்
தீம் பெரும் பொய்கைத் துறை கேழ் ஊரன்  10
3
தேர் தர வந்த நேர் இழை மகளிர்
ஏசுப என்ப, என் நலனே; அதுவே
பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சினக்
கொல் களிற்று யானை நல்கல் மாறே;
4
தாமும் பிறரும் உளர்போல் சேறல்  15
முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின்,
யான் அவண் வாராமாறே; வரினே, வானிடைச்
சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல,
என்னொடு திரியானாயின், வென் வேல்
5
மாரி அம்பின் மழைத் தோற் சோழர் 20
வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை,
ஆரியர் படையின் உடைக, என்
நேர் இறை முன்கை வீங்கிய வளையே!

நயப் புப்பரத்தை இற் பரத்தைக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.
பாவைக் கொட்டிலார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்


No comments:

Post a Comment