“பொருளீட்டும் இடத்துக்கு நம் காதலியையும் அழைத்துச் சென்றால் என்ன” என்று, நெஞ்சே, எண்ணிப்பார் என்று தலைவன் தனக்குள் பேசிக்கொள்கிறான்.
1
நெஞ்சே! செய்வது அறியாமல் இருள் பட்டுக் கிடக்கும் செஞ்சத்தோடு வருந்துபவர்களின் துன்பத்தைப் போக்கும் அருள் நெஞ்சம் கொண்டவராக இருந்தாலும், பொருள் இல்லாதவர் அவர்களின் துன்பத்தைப் போக்க முடியாது என்பதை நானும் அறிவேன்.
2
நீ பொருள் ஈட்ட, கோடைக்கால வெயிலில், ஆண் யானை தன் கொம்பு முரியும் அளவுக்கு, உலர்ந்த யா மரத்து மட்டைகளைப் பிளந்து, தன் பெண் யானைக்கு ஊட்டும் காட்டில், நெஞ்சே, தனியே உன்னோடு வருதல் எனக்குக் கடினம் அன்று.
3
அடுபோர்ச் செழியன் வெற்றி மாலை சூடி முரசு முழக்குபவன். அவன் தலைநகர் மாட மதுரையின் புறமதிலில் பனைமரம். நீண்ட கால வெயிலில் வாடிக் கிடக்கும் பனைமரம். அதன் உச்சியில் பருத்த காம்போடு கூடிய பல மலர்களை உடைய மட்டைகள். அந்த மட்டைகளின் குடை நிழலில் பனம்பாளை. பாளையில் காய்கள். பனங்காயின் வயிற்றின் உள்ளே நுங்கு. வாளைத் தீட்டி வைத்திருப்பது போன்ற வெண்ணிற நுங்கு. நீரினும் இனிய அந்த நுங்கு போல் அமிழ்தம் ஊறும் பல். சிவந்த வாய். ஒளி மிக்க வளையல். இவற்றைக் கொண்ட என் சின்னவளை உடன் அழைத்துச் சென்றால், நெஞ்சே, நமக்கு இனிது.
- பூத்துக் குலுங்கும் பூ ஆரம் போலவும், வீசும் கவரி போலவும், வண்டு மொய்க்க மலர்ந்திருக்கும் மலர் போலவும், உதிரும் முத்துக்களைப் போலவும், சிரிக்கும் இவள் பற்கள் நுங்கு போல் அமிழ்தம் ஊறுபவை.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை
1
இருள் படு நெஞ்சத்து
இடும்பை தீர்க்கும்
அருள் நன்கு உடையர்
ஆயினும் ஈதல்
பொருள் இல்லோர்க்கு அஃது
இயையாது ஆகுதல்
யானும் அறிவென் மன்னே; யானை
தன்
2
கொல் மருப்பு ஒடியக்
குத்தி, சினம் சிறந்து, 5
இன்னா வேனில் இன்
துணை ஆர,
முளி சினை மராஅத்துப்
பொளி பிளந்து ஊட்ட,
புலம்பு வீற்றிருந்த நிலம்
பகு வெஞ் சுரம்
அரிய அல்லமன், நமக்கே
விரி தார்
3
ஆடு கொள் முரசின்
அடு போர்ச் செழியன் 10
மாட மூதூர் மதிற்புறம்
தழீஇ,
நீடு வெயில் உழந்த
குறியிறைக் கணைக் கால்,
தொடை அமை பன்
மலர்த் தோடு பொதிந்து யாத்த
குடை ஓரன்ன கோள்
அமை எருத்தின்
பாளை பற்று அழிந்து
ஒழிய, புறம் சேர்பு, 15
வாள் வடித்தன்ன வயிறுடைப்
பொதிய,
நாள் உறத் தோன்றிய
நயவரு வனப்பின்,
ஆரத்து அன்ன அணி
கிளர் புதுப் பூ
வார் உறு கவரியின்
வண்டு உண விரிய,
முத்தின் அன்ன வெள் வீ
தாஅய், 20
அலகின் அன்ன அரி
நிறத்து ஆலி
நகை நனி வளர்க்கும்
சிறப்பின், தகை மிகப்
பூவொடு வளர்ந்த மூவாப்
பசுங் காய்
நீரினும் இனிய ஆகி, கூர்
எயிற்று
அமிழ்தம் ஊறும் செவ் வாய், 25
ஒண் தொடி, குறுமகட்
கொண்டனம் செலினே!
தலைமகன் பொருள் கடைக்கூட்டிய
நெஞ்சினைக் கழறிச் செலவு அழுங்கியது.
மதுரைத் தத்தங் கண்ணனார்
பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்

No comments:
Post a Comment