Pages

Wednesday, 12 October 2016

அகநானூறு Agananuru 334

தலைவன் தன் தேர்ப்பாகனிடம் கூறுகிறான்.

1
பாக! பின்வாங்காமல் (புலியோடு) போரிட்ட ஆண் விலங்கின் (ஆண்யானையின்) தோல் போர்த்திய நம் வெற்றி முரசை ’இழும்’ என்னும் இடைவிடா ஓசையுடன் முழக்கிப் பகைநாட்டு அரசர்கள் கொடுத்த திறையைப் பெற்றுக்கொண்டோம்.
2
கடலலை முழக்கத்தோடு தானும் சேர்ந்து முழங்கும் மேகமானது, யானைக் கூட்டம் போல ஒன்று கூடி அவற்றின் கைகள் போல மழைக்காலை இறக்கி, மகளிர் விளையாடும் கழங்கு போல ஆலங்கட்டிகள் (ஆலி) சிதறும்படி மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
3
வெண்ணிறம் (வால் < வானின் = வெண்மை “வாலறிவன்”) கொண்டு விளங்கும் அன்னத்தின் சிறகு போன்ற நிறம் கொண்டதும் தாவும் கால்நடையில் வல்லதுமான நான்கு (நால்கு) குதிரைகளைக் கொடித்தளம் (கொடிஞ்சி) கொண்ட தேரில் பூட்டு. அவை கால் பரிந்து ஓடும் ஓட்டம் தப்பாமல் ஓடட்டும். மயில்கள் கூவும் கார்காலத்தில், இரும்புக் கட்டுப் போட்ட தேர்ச் சக்கரம் ஈர நிலத்தை அறுத்துக்கொண்டு பாயும்படி ஓடட்டும். தழைத்த கூந்தலுக்கு இடையே தோன்றும் முகத்தில் (நுதல் – ஆகுபெயர்) பூவைப் போல் (குவளைப் பூவைப் போல்) பொலியும் கண்ணோடு காத்திருக்கும் என் மனைவியை இப்பொழுதே நான் காணவேண்டும்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை,  முல்லை

1
ஓடா நல் ஏற்று உரிவை தைஇய
ஆடு கொள் முரசம் இழுமென முழங்க,
நாடு திறை கொண்டனம் ஆயின் பாக!
2
பாடு இமிழ் கடலின் எழுந்த சும்மையொடு
பெருங் களிற்றுத் தடக் கை புரையக் கால் வீழ்த்து,               5
இரும் பிடித் தொழுதியின் ஈண்டுவன குழீஇ,
வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும்
கழங்கு உறழ் ஆலியொடு கதழ் உறை சிதறி,
பெயல் தொடங்கின்றால், வானம்; வானின்
3
வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப,             10
நால்கு உடன் பூண்ட கால் நவில் புரவிக்
கொடிஞ்சி நெடுந் தேர் கடும் பரி தவிராது,
இன மயில் அகவும் கார் கொள் வியன் புனத்து,
நோன் சூட்டு ஆழி ஈர் நிலம் துமிப்ப,
ஈண்டே காணக் கடவுமதி பூங் கேழ்ப் 15
பொலிவன அமர்த்த உண்கண்,
ஒலி பல் கூந்தல் ஆய் சிறு நுதலே!

வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.
மதுரைக் கூத்தனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்



No comments:

Post a Comment