Pages

Tuesday, 11 October 2016

அகநானூறு Agananuru 333

தலைவியை விட்டுப் பிரிந்து போன தலைவனைத் தோழி பழிக்கிறாள். “நல்ல வாக்குகளையே சொல்” என்று தலைவி தோழிக்கு அறிவுரை கூறுகிறாள்.  

1
தோழி! நீ வாழ்க! எனத் தோழியை விளித்துத் தலைவி சொல்கிறாள்.

“யா மரத் தளிர் போன்றது உன் மேனி. அந்த இலைத் தளிரில் அரக்கைக் கொட்டியது போல உன் மேனியில் பசப்பு ஊர்ந்து கிடக்கிறது. பெரிதும் மனம் நொந்து வருந்துகிறாய்”. என்றெல்லாம் சொல்லி அவர்மேல் பழி உண்டாக்க விரும்புகிறாய். இப்படிப்பட்ட மொழியை என்னால் தாங்கிக்கொள்ள முடியுமா? இப்படிப்பட்ட உன் ஆதங்கச் சொற்களை அவரிடம் யாராவது சொன்னால், அவர் பொருளீட்டும் தொழில் விளங்காமல் போய்விடும் அல்லவா. அப்படி விளங்காமல் போனாலும், விளங்கினாலும் அவர் அங்குக் காலத்தை நீட்டிக்க மாட்டார், என்பது என் கணிப்பு.
  • தலைத்தருதல் = உண்டாக்குதல்
  • வயங்காது = விளங்காது
  • எவ்வம் = துன்பம், ஆதங்கம்
2
வேனில் காலத்தில், கோடைக்காற்று வீசும்போது, குருத்து ஒடிந்து நிற்கும் பனைமரம் போல யானை தன் துதிக்கையை உயர்த்தி வானத்தை நோக்கி ஒலி எழுப்பும் மலைப்பகுதியைக் கடந்து நெடுந்தொலைவு சென்றிருந்தாலும், சொன்ன சொல் தவறாமல், ஒருநாள் கூடக் கூடுதலாகத் தங்காமல், (நம்முடையவரான) என் காதலர் வந்துவிடுவார். வந்துவிடுவார் என்று உன் வாயால் இனியது சொல். பயன் தரும் கொள்கையுடன் நயம் திரியாமல் சொல். அது பலிக்கட்டும்.
  • தலைத்திரியா = மாறுபடாத  
  • வாயாக = வாய்மை ஆகும்படி, பலிக்கும்படி
3
உன் வாக்கு பலித்து அவர் வருவார் ஆயின் நன்று. வராமல் அங்கேயே இருந்தாலும் இருக்கட்டும். நீ வருவார் என்று நல்வாக்கு சொன்னால் என் பசலைநோய் போய்விடும். இது உறுதி. (தில்ல) சென்ற இடத்தில் செய்யும் தொழில் முற்றுப்பெற்றுத் திரும்பி வர மறுக்கும் குறுகிய பேராசை மிக்க உள்ளத்தவர் ஆயினார் என்னும் செய்தியோடு தூது வந்தாலும் சரி; நல்லதையே சொல்.


பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை,  பாலை

1
''யாஅ ஒண் தளிர் அரக்கு விதிர்த்தன்ன நின்
ஆக மேனி அம் பசப்பு ஊர,
அழிவு பெரிது உடையையாகி, அவர்வயின்
பழி தலைத்தருதல் வேண்டுதி; மொழி கொண்டு
தாங்கல் ஒல்லுமோ மற்றே; ஆங்கு நின்   5
எவ்வம் பெருமை உரைப்பின்; செய் பொருள்
வயங்காது ஆயினும் பயம் கெடத் தூக்கி,
நீடலர் வாழி, தோழி! கோடையில்,
2
குருத்து இறுபு உக்க வருத்தம் சொலாது,
தூம்புடைத் துய்த் தலை கூம்புபு திரங்கிய,   10
வேனில், வெளிற்றுப் பனை போலக் கை எடுத்து,
யானைப் பெரு நிரை வானம் பயிரும்
மலை சேண் இகந்தனர் ஆயினும், நிலை பெயர்ந்து,
நாள் இடைப்படாமை வருவர், நமர்'' என,
பயம் தரு கொள்கையின் நயம் தலைதிரியா     15
நின் வாய் இன் மொழி நல் வாயாக
3
வருவர் ஆயினோ நன்றே; வாராது,
அவணர் காதலர் ஆயினும், இவண் நம்
பசலை மாய்தல் எளிதுமன் தில்ல
சென்ற தேஎத்துச் செய் வினை முற்றி,             20
மறுதரல் உள்ளத்தர் எனினும்,
குறுகு பெரு நசையொடு தூது வரப்பெறினே.

பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
கல்லாடனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

No comments:

Post a Comment