Pages

Tuesday, 11 October 2016

அகநானூறு Agananuru 332

திருமணத்திற்குப் பின்னர் தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

1
முளைத்து வளரும் மூங்கில் முளையை முருக்கி, தன் சுற்றத்துடன் மேய்ந்த கருகரு ஆண்யானையானது, தண்ணீர் இருக்குமிடத்தில், நீர் பருக வரும் விலங்கை இரையாக்கிக்கொள்ளக் காத்திருக்கும் போராற்றல் உழுவையைக் குத்தித் தொலைத்துவிட்டு, குருதி படிந்திருந்த தன் கொம்புகளை பொழியும் மழைநீரில் கழுவிக்கொண்டு, மலையடுக்கத்தில் உள்ள கல்லுக் குகைக்கு மெல்ல மெல்ல நடந்து சென்று, தன்னோடு போராடும் புலியை அடக்கிய செம்மாப்போடு, காம உணர்வு கண்ணில் மதமாக ஒழுக, அதனை வண்டுகள் யாழிசையுடன் மொய்த்துக்கொண்டிருக்கையில், தன் பெண்யானையோடு உடலுறவு கொண்டுவிட்டு வழை மரம் வளர்ந்திருக்கும் மலைச்சோலையில் உறங்கும் நாட்டின் தலைவன் என் நாடன்.
  • உழுவை = leopard |  வேங்கை = tiger
  • கேழ் கிளர் = கருநிறம் விளங்கும், கருகரு

2
தோழி! “நாடன் உன் புரைமைக்குத் தக்க சாயலை உடையவன்” என்று நான் அடங்குமாறு நீ அன்போடு கூறிய இன்சொல் உண்மையாகவே வாய்க்கப் பெற்றுள்ளேன். விரும்பியவர்க்கு அமிழ்தம் கிடைத்தது போல, திருமண மாலையுடன் கூடிய மார்பினை வண்டொலியும் இடையில் புகமுடியாதபடி அவன் என்னைத் தழுவினான். களவுக் காலத்தில் முதல்நாள் தழுவியது போலவே தழுவினான்.
  • புரைமை = மேன்மை, உயர்வு
  • சாயல் = இளமை-அழகு

வேட்ட பொழுதின் அவை-அவை போலுமே
தோள்-தாழ் கதுப்பினாள் தோள் – திருக்குறள் 1111

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை,  குறிஞ்சி

1
முளை வளர் முதல மூங்கில் முருக்கி,
கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை,
நீர் நசை மருங்கின் நிறம் பார்த்து ஒடுங்கிய,
பொரு முரண் உழுவை தொலைச்சி, கூர் நுனைக்
குருதிச் செங் கோட்டு அழி துளி கழாஅ,           5
கல் முகை அடுக்கத்து மென்மெல இயலி,
செறு பகை வாட்டிய செம்மலொடு, அறு கால்
யாழ் இசைப் பறவை இமிர, பிடி புணர்ந்து,
வாழை அம் சிலம்பில் துஞ்சும் நாடன்
2
நின் புரை தக்க சாயலன் என, நீ 10
அன்பு உரைத்து அடங்கக் கூறிய இன் சொல்
வாய்த்தன வாழி, தோழி! வேட்டோர்க்கு
அமிழ்தத்து அன்ன கமழ் தார் மார்பின்
வண்டு இடைப் படாஅ முயக்கமும்,
தண்டாக் காதலும், தலை நாள் போன்மே!     15

இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது.
கபிலர் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

No comments:

Post a Comment