Pages

Monday, 10 October 2016

அகநானூறு Agananuru 331

தோழி, என் காதலர் அன்பு இல்லாதவர்.

1
உயர்ந்த அடிமரம் கொண்டது இரும்பை. அதில் சங்கைக் கடைந்துவைத்தது போல நன்கு குழைந்து வெண்ணிறப் மலர்ந்திருக்கும். குட்டடிப் போட்ட கரடிக் கூட்டம் ஆடு மேய்வது போலப் கூட்டமாக அதனை உரித்துத் தின்னும். மிஞ்சிக் கிடக்கும் பூவை, பசுமையான தழையாடை உடுத்திக்கொண்டிருக்கும் பழையர்-குடி மகளிர் பொறுக்கி எடுத்து மூங்கில் குழாய்ப் பாத்திரத்தில் அடைத்து வைத்துக்கொள்வர். இந்தப் பழையர் வாழும் தெருக்களைக் கொண்ட சிறுகுடிச் சிற்றூர்கள் பல பின்னிடுமாறு அவர் முன்னேறிச் செல்வார். தோழி! அப்படிச் சென்ற என் காதலர் அன்பு இல்லாதவர்.
2
வலிமையான மரக்கிளைக் கொம்பை வளைத்துச் செய்யப்பட்ட சீறியாழில் இசையெழுப்பும் துறையில் முழுமை பெற்ற பாணர் இசையைக் கேட்டு அவர்களுக்குப் பலவகையான அணிகலன்களை உதவுவதற்கென்றே அரசன் திதியன் தன் நாளவையில் வீற்றிருப்பான். தேனில் வடித்த கள்ளை உண்டுகொண்டு வீற்றிருப்பான். அவன் வேளிர் குடியினரோடு போரிடுவதற்காக வாளை உறையிலிருந்து எடுத்தான். அப்போது அவனை எதிர்த்து நிற்பவர் யாருமே இல்லாமல் போனது போல, என்னை இங்கேயே விட்டுவிட்டு, ஏதுமில்லாமல் வறண்டு கிடக்கும் பாலைநிலக் காட்டில் அவர் சென்றுவிட்டார். அவர் அன்பு இல்லாதவர்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை,  பாலை

1
நீடு நிலை அரைய செங் குழை இருப்பை,
கோடு கடைந்தன்ன, கொள்ளை வான் பூ,
ஆடு பரந்தன்ன, ஈனல் எண்கின்
தோடு சினை உரீஇ உண்ட மிச்சில்
பைங் குழைத் தழையர் பழையர் மகளிர்   5
கண் திரள் நீள் அமைக் கடிப்பின் தொகுத்து,
குன்றகச் சிறுகுடி மறுகுதொறும் மறுகும்
சீறூர் நாடு பல பிறக்கு ஒழிய,
சென்றோர் அன்பு இலர் தோழி!என்றும்,
2
அருந் துறை முற்றிய கருங் கோட்டுச் சீறியாழ்ப் 10
பாணர் ஆர்ப்ப, பல் கலம் உதவி,
நாளவை இருந்த நனை மகிழ்த் திதியன்,
வேளிரொடு பொரீஇய, கழித்த
வாள் வாய் அன்ன வறுஞ் சுரம் இறந்தே!

தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
மாமூலனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

மூங்கில் குழாய்ப் பாத்திரம்

Irumbai 

No comments:

Post a Comment