Pages

Sunday, 9 October 2016

அகநானூறு Agananuru 328

கழைதின் யாக்கை
கரும்பு தின்பது போன்ற உடம்பு


வழைமரம் மண்டிக் கிடக்கும் மலையடுக்கத்தைச் சுற்றி வளைத்துகொண்டு நள்ளிரவில் மழை பொழிந்தது. 

கொம்பு ஊதும் கலைஞர் (வயிரியர்) முழவு முழக்குவது போல பாம்புப்பை நஞ்சை இடறும் இடி முழக்கத்துடன் மழை பொழிந்தது. 

அந்த நள்ளிரவில் அவர் வந்தார். 
என் முலையைத் தழுவினார். 
எங்களது கண்கள் சிவந்தன. 
அந்தக் கண்சிவப்பு மாற அளவளாவிப் பேசினார். 
அதனால் நள்ளிரவில் எங்களின் இனிய நட்பு மலர்ந்தது. 

என் வளையல்கள் கழன்றோடவும், 
அவரை நினைத்துக்கொண்டு நான் வருந்தவும், 
அவர் என்னை வெறுத்து (முனிந்து) விலகிவிடுவார் 
எனத் தெளிவாக அப்போது அறிந்திருந்தால், 
அவர் அளவளாவிப் பேசியதை நம்பாமல், 
அவர் என்னை அணைக்கும்போதெல்லாம் 
நானும் சாரல்நாடன் மார்பை விடாமல் அணைத்துக்கொண்டு 
அவரை அடக்கி என் கட்டுக்குள் வைத்திருப்பேன். 

இப்போது என்ன செய்வது?

அவன் மலைச்சாரல்-நாடன். 
மழைமேகம் தவழும் மலைச்சோலையில் கன்று போட்டிருக்கும் பெண்யானை கரும்பைத் தின்று பாலூறும் உடம்பை அதன் ஆண்யானை கையால் தடவிக்கொடுக்கும் வழைமரச் சோலையை உடைய சாரல்-நாடன்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை,  குறிஞ்சி

வழை அமல் அடுக்கத்து, வலன் ஏர்பு, வயிரியர்
முழவு அதிர்ந்தன்ன முழக்கத்து ஏறோடு,
உரவுப் பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து,
அரவின் பைந் தலை இடறி, பானாள்
இரவின் வந்து, எம் இடைமுலை முயங்கி,   5
துனி கண் அகல அளைஇ, கங்குலின்
இனிதின் இயைந்த நண்பு, அவர் முனிதல்
தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம் ஆயின்,
இலங்கு வளை நெகிழ, பரந்து படர் அலைப்ப, யாம்
முயங்குதொறும் முயங்குதொறும் உயங்க முகந்து கொண்டு 10
அடக்குவம் மன்னோ தோழி! மடப் பிடி
மழை தவழ் சிலம்பில் கடுஞ்சூல் ஈன்று,
கழை தின் யாக்கை விழை களிறு தைவர,
வாழை அம் சிலம்பில் துஞ்சும்
சாரல் நாடன் சாயல் மார்பே!       15

இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியது.
மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்


No comments:

Post a Comment