அவர்மீது குற்றம் இல்லை. என் விதிப்பயன் தனித்திருந்து துன்புறுகிறேன் என்று தலைவி தோழியிடம் சொல்லி ஆறுதல் பெறுகிறாள்.
1
அம்ம! தோழி! கேள்! வெள்ளை மணல் குவிந்து, செல்வச் செழிப்புடன் திகழும் நம் வீட்டில் என்னைப் புணரும் வாய்ப்பினை அவர் பெற்றார். அந்தத் திருட்டுத்தனம் ஊர்மக்கள் வாயில் பூத்தது.
2
என் தாய் இதனை மனத்தில் வைத்துக்கொண்டு ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் என்னைப் பாதுகாத்து வந்தாள். இதனை உணர்ந்த அவர், இவள் பாவம், இவளுக்கு வேறு என்ன வழி இருக்கிறது என்று எண்ணினார். என்மேல் அருள் பாலித்தார்.
3
அதியன் நாட்டைக் கைப்பற்றிக்கொண்ட அள்ளன் வெற்றிப் பெருமிதம் மிக்கவனாகத் திரிந்தான். அதியன் அள்ளனைத் தாக்கிப் பணியவைத்தான். அப்போது அதியன் வெற்றி முழக்கம் செய்யவில்லை. அவனது ஊதுகொம்பும், முரசும் முழக்கப்படாமல் செயலற்றுக் கிடந்தன.
4
“அப்போது வெற்றி முழக்கம் இல்லாமல் கிடந்த ஊர் போல, காடே அழகு இழந்து பாலை நிலமாக மாறி கொடுமையானதாக உள்ளது. சிறிது காலம் பொறுத்துக்கொள். நன்மழை பொழியும். அப்போது உன் பல்லிதழ்களைச் சுவைப்பதற்காக என்னுடன் கூட்டிச் செல்கிறேன்” என்று கூறினார். “நீ தளரும் நடை உடையவளாயிற்றே” என்று சொன்னார்.
5
பல நாட்கள் கழிந்துவிட்டன. அவர் நாட்டம் பொருள் ஈட்டும் முயற்சியில் திரும்பிவிட்டது. என் ஆவல் செத்துவிட்டது. (பெரும்பபிறிது = சாவு)
6
தமிழகத்தின் வடபகுதியில் பாணன் நாடு உள்ளது. அந்த நாட்டு வழியில் அவர் சென்றுவிட்டார். வானம் வாள் போல் பளபளக்கும் கோடைக்காலத்தில் சென்றுள்ளார். ஆளைக் கொல்லும் யானை இருக்கும் சோலை வழியில் செல்கிறார். என்னை விட்டுவிட்டுச் செல்கிறார். அவர்மீது பழியை எப்படிச் சுமத்துவேன்? எனக்கு வந்துள்ள துன்பக் காலம். ஊழ் வினை, என்று சொல்லித் தலைவி தன்னைத் தானே நொந்துகொள்கிறாள்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை
1
அம்ம! வாழி, தோழி!
காதலர்,
''வெண் மணல் நிவந்த
பொலங் கடை நெடு நகர்,
நளி இருங் கங்குல்
புணர் குறி வாய்த்த
களவும் கைம்மிக அலர்ந்தன்று;
அன்னையும்
2
உட்கொண்டு ஓவாள் காக்கும்; பின்
பெரிது 5
இவண் உறைபு எவனோ?
அளியள்!'' என்று அருளி,
3
''ஆடு நடைப் பொலிந்த
புகற்சியின், நாடு கோள்
அள்ளனைப் பணித்த அதியன் பின்றை,
வள் உயிர் மாக்
கிணை கண் அவிந்தாங்கு,
4
மலை கவின் அழிந்த
கனை கடற்று அருஞ் சுரம் 10
வெய்யமன்ற; நின் வை எயிறு
உணீஇய,
தண் மழை ஒரு
நாள் தலையுக! ஒள் நுதல்,
ஒல்கு இயல், அரிவை!
நின்னொடு செல்கம்;
சில் நாள் ஆன்றனை
ஆக'' என, பல் நாள்,
5
உலைவு இல் உள்ளமொடு
வினை வலி உறீஇ, 15
எல்லாம் பெரும் பிறிதாக,
வடாஅது,
6
நல் வேற் பாணன்
நல் நாட்டு உள்ளதை,
வாள் கண் வானத்து
என்றூழ் நீள் இடை,
ஆள் கொல் யானை
அதர் பார்த்து அல்கும்
சோலை அத்தம் மாலைப்
போகி, 20
ஒழியச் சென்றோர் மன்ற;
பழி எவன் ஆம்கொல்,
நோய் தரு பாலே?
கொண்டு நீங்கக் கருதி
ஒழிந்த தலைமகன் பிரிவின்கண் தலைமகள்
தோழிக்குச் சொல்லியது.
மாமூலனார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்

No comments:
Post a Comment