இவள் அரிவைப் பருவத்தவள். அறியாதவள் போல்
உரையாடுபவள். அணிகலன்களைத் திருத்திக்கொண்டிருக்கிறாள். இவளது அகலமான தோளுக்கு விருந்து
கிடைக்கும் போல் இருக்கிறது.
தளிர் போன்ற நிறம் கொண்ட கிளி மரப் பொந்தில்
இனிமையாக வளர்க்கும் கிளிப்பிள்ளையின் தூவிச்சிறகு போலச் சுனையில் பாசி படர்ந்த நீர்
நிறைந்திருக்கிறது. முழக்கும் பறையின் கண் போன்ற இந்தச் சுனையில் மழைத்துளி படும்போது
நீர்க்குமிழிகள் துள்ளுகின்றன. தோன்றி மறைகின்றன.
காற்று பூக்களை உதிர்க்கிறது. நிலம் மணக்கப்
பூக்கள் காற்றில் பறந்தோடுகின்றன. மரம்கொத்திப் பறவையின் சிறகு போல் தோன்றிப் பறந்தோடுகின்றன.
அறல் அறலாகப் படிந்திருக்கும் மணலில் பறந்தோடுகின்றன. தேன் உண்ணும் வண்டுகள் காற்றால்
உதிர்ந்த பூக்களிலும் மொய்க்கின்றன.
இவளது காதலன் நெடுந்தகை தேரில் வருகிறான்.
அவன் தேர்ச் சக்கரம் உதிர்ந்து கிடக்கும் பூக்களில் ஊர்ந்து வருகிகிறது. அந்தத் தேர்க்கால்
பள்ளத்தில் விரைந்து ஓடும் மழைநீர் பாம்பு ஊர்வது போல ஓடுகிறது.
இப்படிப்பட்ட முல்லை நிலத்தில், இப்படியெல்லாம்
அவன் தேர் வருவதை இவள் விரும்பி நினைக்கிறாள். இது இவளுக்கு விருந்து.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, முல்லை
விருந்தும் பெறுகுநள் போலும், திருந்து இழைத்
தட மென் பணைத்
தோள், மட மொழி அரிவை
தளிர் இயல் கிள்ளை
இனிதினின் எடுத்த
வளராப் பிள்ளைத் தூவி
அன்ன,
உளர் பெயல் வளர்த்த,
பைம் பயிர்ப் புறவில் 5
பறைக் கண் அன்ன
நிறைச் சுனை தோறும்
துளி படு மொக்குள்
துள்ளுவன சால,
தொளி பொரு பொகுட்டுத்
தோன்றுவன மாய,
வளி சினை உதிர்த்தலின்,
வெறி கொள்பு தாஅய்,
சிரற் சிறகு ஏய்ப்ப
அறற்கண் வரித்த 10
வண்டு உண் நறு
வீ துமித்த
நேமி
தண் நில மருங்கில்
போழ்ந்த வழியுள்,
நிரை செல் பாம்பின்
விரைபு நீர் முடுக,
செல்லும், நெடுந்தகை தேரே
முல்லை மாலை நகர்
புகல் ஆய்ந்தே! 15
வினை முற்றிய தலைமகன்
கருத்து உணர்ந்து உழையர் சொல்லியது.
ஒக்கூர் மாசாத்தியார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்

No comments:
Post a Comment