Pages

Friday, 7 October 2016

அகநானூறு Agananuru 319

நீ “செல்வேன்” என்கிறாய். 
இவள் “உன்னைப் பிரிந்திருக்க இயலாது” என்கிறாள். 

நான் என்ன செய்வேன், 

என்கிறாள் தோழி.
1
வேர்கள் பின்னிக் கிடக்கும் ஆலமரக் கிளையில் ஏறி அமர்ந்துகொண்டு, கொடிய வில்லேந்திய எயின மறவர், ஊருக்குச் செல்லும் வழிப்போக்கர்களை அவர்களின் பொருளைக் கவர்வதற்காக தம் வில்-திறம் காட்டிப் பிணமாக்குவர். அந்தப் பிணத்தைத் தின்னுவதற்காகச் சிறிய வாயை உடைய கருநிறக் காக்கைக் கூட்டம் காத்திருக்கும் பாழ்பட்ட பெருவெளியில் நீ பொருளீட்டச் செல்வேன் என்கிறாய்.
2
அணங்கு போல் கண்டாரை உருத்தும் பார்வை. ‘ஐ’ என்று வியக்கும்படி மிகச் சிறிதாக இருக்கும் இடை. உடலிலே நுட்பமான மாமை நிறம். வேங்கைப் பூ பூத்துக் கிடப்பது போன்று நல்ல நிறத்துடன் தோன்றும் முலையில் அழகு திகழும் சுணங்கு. வண்டு மொய்க்கும் மணம் கொண்ட கூந்தல். பருத்த தோள். இவற்றையெல்லாம் கொண்ட இவளைப் பிரிய நினைத்தால்.
3
நீ அடையக் கருதும் அரிய பொருட்செல்வத்தைப் பெறுவாயாக. பறித்த தழை வாடுவது போன்ற மென்மையான மன வலிமை உடையவள் இவள். தளிர் போல் இளையவள். தளிர் மரத்ததில் இருப்பது போல் உன்னை ஒட்டிக்கொண்டிருக்கும் அன்பினை உடையவள். “செல்வேன்” என்று நீ சொன்னால், “உன்னை விட்டு இங்கே இருப்பேன்” என்னும் அறிவுக் கூர்மை இவளுக்கு இல்லை. இதனை உணர்ந்துகொள்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை,  பாலை

1
மணி வாய்க் காக்கை மா நிறப் பெருங் கிளை
பிணி வீழ் ஆலத்து அலங்கு சினை ஏறி,
கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும்
கடு வினை மறவர் வில்லிடத் தொலைந்தோர்
படு பிணம் கவரும் பாழ் படு நனந்தலை,         5
2
அணங்கு என உருத்த நோக்கின், ஐயென
நுணங்கிய நுசுப்பின், நுண் கேழ் மாமை,
பொன் வீ வேங்கைப் புது மலர் புரைய
நல் நிறத்து எழுந்த, சுணங்கு அணி வன முலை,
சுரும்பு ஆர் கூந்தல், பெருந் தோள், இவள்வயின் 10
பிரிந்தனிர் அகறல் சூழின், அரும் பொருள்
3
எய்துக மாதோ நுமக்கே; கொய் தழைத்
தளிர் ஏர் அன்ன, தாங்கு அரு மதுகையள்,
மெல்லியள், இளையள், நனி பேர் அன்பினள்,
''செல்வேம்'' என்னும் நும் எதிர்,               15
''ஒழிவேம்'' என்னும் ஒண்மையோ இலளே!

செலவு உணர்த்திய தலைமகற்குத் தோழி செலவு அழுங்கச் சொல்லியது.
எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்


No comments:

Post a Comment