Pages

Friday, 7 October 2016

அகநானூறு Agananuru 318

காதலிக்கும் 
காதலுக்கு உதவும் தோழிக்கும் 

எப்போது நிம்மதி?

1
மலைநாட! நீ வரும் சிறிய வழியில் காட்டுமானும் யானையும் வருகின்றன. வானத்தில் இடியும் முழங்குகின்றது. பாம்பு, புலி ஆகியவற்றின் அச்சமும் உண்டு. இரவில் வருகிறாய். தனியே வருகிறாய்.
2
உன் நாட்டில் அருவியின் பாட்டும் கேட்கும். தேனீக்களின் பாட்டும் கேட்கும். இவை முழவும் யாழும் சேர்ந்து இசைப்பது போல இருக்கும். இப்படிப் பழுத்த பெருமைகள் பலவற்றைக் கொண்ட மலைநாட்டின் தலைவன் நீ.
3
இவளோடு சேர்ந்திருக்க வேண்டுமா? சரி. சேர்ந்திரு. இன்று முதல் இரவில் வராதே. வந்தால் நாங்கள் துன்பப்படுவோம். இன்று எங்களைக் கண்டு திரும்பும்போது, ஐயனே, உன் ஊருக்குச் சென்ற பின்னர், நீ வேட்டைக்குச் செல்லும்போது, மூங்கில் காட்டில் பிரிந்து சென்ற உன் நாய்களை அழைக்கக் கொம்பு ஊதுவாயே, அந்தக் கொம்பை ஊத வேண்டும். அது கேட்டு நீ பாதுகாப்பாகச் சென்றுவிட்டாய் சென்றுவிட்டாய் என்று நாங்கள் நிம்மதியாக இருப்போம். – தோழி தலைவனைக் கேட்டுக்கொள்கிறாள்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை,  குறிஞ்சி

1
கான மான் அதர் யானையும் வழங்கும்;
வான மீமிசை உருமும் நனி உரறும்;
அரவும் புலியும் அஞ்சுதகவு உடைய;
இர வழங்கு சிறு நெறி தமியை வருதி
2
வரை இழி அருவிப் பாட்டொடு பிரசம்     5
முழவு சேர் நரம்பின் இம்மென இமிரும்,
பழ விறல் நனந்தலைப் பய மலை நாட!
3
மன்றல் வேண்டினும் பெறுகுவை; ஒன்றோ
இன்று தலையாக வாரல்; வரினே,
ஏம் உறு துயரமொடு யாம் இவண் ஒழிய,       10
எக் கண்டு பெயருங் காலை, யாழ நின்
கல் கெழு சிறுகுடி எய்திய பின்றை,
ஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடு
வேய் பயில் அழுவத்துப் பிரிந்த நின்
நாய் பயிர் குறி நிலை கொண்ட கோடே!          15

இரவுக்குறி வந்த தலைமகனை வரவு விலக்கி வரைவு கடாயது.
கபிலர் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

ஊது கொம்பு

No comments:

Post a Comment